போலி இயற்கை உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை
போலி இயற்கை உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிற்சாலைகளில் திடீர் ஆய்வு நடத்திய பிறகு வேளாண் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
பொள்ளாச்சி
போலி இயற்கை உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிற்சாலைகளில் திடீர் ஆய்வு நடத்திய பிறகு வேளாண் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
தொழிற்சாலைகளில் ஆய்வு
பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம் பகுதிகளில் உரிமம் பெறாத நிறுவனங்களின் பிரதிநிதிகள் விவசாயிகளிடம் நேரடியாக சென்று போலி இயற்கை உரங்களை விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையொட்டி கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி தலைமையில் தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் புனிதா, சக்திவேல், உதவி இயக்குனர் நாகபசுபதி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் பொள்ளாச்சி அருகே பக்கோதிபாளையத்தில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது உரங்கள் தயாரிக்க அனுமதி பெறப்பட்டு உள்ளதா? விதிகளை பின்பற்றி உரங்கள் தயாரிக்கப்படுகிறதா?, இயற்கை உரங்கள் தயாரிக்க பயன்படும் பொருட்களின் கலவை குறித்து ஆய்வு நடத்தினர். பின்னர் பூசாரிபட்டி, ஏரிப்பட்டி, மரம்புடுங்கிகவுண்டனூர் ஆகிய இடங்களில் செயல்படும் உர தொழிற்சாலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடும் நடவடிக்கை
இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி வட்டார பகுதிகளில் உரிமம் பெறாத நிறுவன பிரதிநிதிகளின் ஆலோசனையின்பேரில் விவசாயிகள் தென்னை மரங்களுக்கு உரமிடுதல், பூச்சி கொல்லி மருந்துகளை தெளித்தல் கூடாது. வேளாண் துறை அதிகாரிகளின் ஆலோசனைகளை மட்டுமே பெற்று உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்து பயன்படுத்த வேண்டும்.
இயற்கை உரம் என்ற பெயரில் போலியான இடுப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் உரங்கள் தென்னை மரங்களில் மகசூலை பாதிக்கும். போலி இயற்கை உரம் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story