அறுவடைக்கு தயாரான மஞ்சள் குலைகள்
நெகமம் அருகே பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சள் குலைகள் அறுவடைக்கு தயாராக உள்ளன.
நெகமம்
நெகமம் அருகே பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சள் குலைகள் அறுவடைக்கு தயாராக உள்ளன.
மஞ்சள் சாகுபடி
கோவை மாவட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் சாகுபடி அதிகளவில் இருந்தது. அதற்கு ஊடுபயிராக மிளகாய், துவரை, ஆமணக்கு, கொள்ளு, வாழைகளை சாகுபடி செய்தனர். இதன் மூலம் விவசாயிகள் மிகுந்த பயன் அடைந்தனர். இதற்கு பாசன கிணறுகளில் போதிய தண்ணீர் இருந்ததும், பருவமழை தவறாமல் பெய்ததும்தான் முக்கிய காரணமாக இருந்தது.
சாகுபடி செய்து 12 மாதங்களுக்கு பிறகு மஞ்சள் கிழங்குகள் தோண்டி எடுக்கப்படும். இதை வேக வைக்க ஒரு மாதம் ஆகும். பின்னர் வேக வைத்த மஞ்சளை கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்வார்கள். இதனால் மஞ்சள் சாகுபடி விவசாயிகளுக்கு திருப்திகரமாக இருந்தது.
தண்ணீர் பற்றாக்குறை
ஆனால் நாளடைவில் போதிய மழை இல்லாததால், பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் மஞ்சள் சாகுபடிக்கு விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. பெரும்பாலும் குறுகிய கால பயிர் சாகுபடியை அதிகம் விரும்பினர். குறிப்பாக 3 முதல் 4 மாதங்களில் வருமானம் கிடைக்கும் பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.
இதனால் நெகமம் பகுதியில் விவசாயிகள் தென்னைக்கு அடுத்ததாக தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், புடலங்காய், பாகற்காய், அரசாணிக்காய், முள்ளங்கி, கொத்தவரங்காய், பூசணிக்காய், பொறியல் தட்டை சாகுபடி செய்கின்றனர். இதனால் மஞ்சள் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இருப்பினும் பாரம்பரியத்தை மறக்காத ஒருசில விவசாயிகள் குறைவான பரப்பளவில் மஞ்சளை தனிப்பயிராக அல்லாமல் தென்னைகளுக்கு இடையே ஊடுபயிராக சாகுபடி செய்து உள்ளனர்.
அறுவடைக்கு தயார்
நெகமம் அருகே உள்ள எம்மேகவுண்டன்பாளையத்தில் ஒரு ஏக்கருக்கும் மேல் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இது தற்போது பொங்கல் பண்டிகைக்காக அறுவடைக்கு தயாராகி உள்ளது. பொங்கல் பண்டிகையில் வாழை இலையில் பொங்கல், கரும்பு, காய்-கனிகள் உள்ளிட்டவற்றை வைத்து வழிபடுவார்கள். இதில் மஞ்சள் குலை முக்கிய பங்கு வகிக்கும். இதனால் எம்மேகவுண்டன்பாளையத்தில் மஞ்சள் அறுவடைக்கு தயாராகி வருகிறது.
இதனை மொத்த வியாபாரிகள் ஒட்டு மொத்த மஞ்சளை குலைகளையும் கொள்முதல் செய்து, பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், உடுமலை, சுந்தராபுரம், பல்லடம், சூலூர், நெகமம், சோமனூர், கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வார்கள். கடந்த ஆண்டு ஒரு ஜோடி மஞ்சள் குலை ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்பட்டது. இந்த ஆண்டு ஒரு ஜோடி மஞ்சள் குலை ரூ.45 முதல் ரூ.50 வரை விற்பனை ஆகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
Related Tags :
Next Story