பழங்குடியின சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்ததாக புகார்


பழங்குடியின சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்ததாக புகார்
x
தினத்தந்தி 6 Jan 2022 9:43 PM IST (Updated: 6 Jan 2022 9:43 PM IST)
t-max-icont-min-icon

டாப்சிலிப் அருகே பழங்குடியின சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக போக்சோ வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி

டாப்சிலிப் அருகே பழங்குடியின சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக போக்சோ வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை போலீஸ் நிலையத்தில் தன்னார்வலர் தன்ராஜ் என்பவர் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், டாப்சிலிப் அருகே கடந்த 1-ந் தேதி 12 வயது சிறுமியை ஒரு கும்பல் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி, குடும்பத்தினரிடம் விசாரணை

இதற்கிடையில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமியிடம், வால்பாறை இன்ஸ்பெக்டர் கற்பகம் விசாரணை நடத்தினார். மேலும் நேற்று பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுமியை அழைத்து சென்று, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
டாப்சிலிப் அருகே பழங்குடியின கிராமத்தில் 12 வயது பள்ளி மாணவியை 5-க்கும் மேற்பட்ட நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் வந்தது. அதன்பேரில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி மற்றும் அவளது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மருத்துவ அறிக்கை

முதற்கட்ட விசாரணையில், அந்த சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை என்று தெரிகிறது. புலன் விசாரணையை முடித்து, குறித்த காலத்திற்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் அறிக்கை வந்த பிறகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்து உள்ளதா? என்பது குறித்த முழுவிவரம் தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story