தனியார் கல்லூரியில் மாணவர்கள் இடையே கோஷ்டி மோதல்: அண்ணன், தம்பியை கடத்தி கட்டி வைத்து அடி-உதை

துரைப்பாக்கத்தில் தனியார் கல்லூரியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் அண்ணன்-தம்பியை கடத்திச்சென்று கட்டி வைத்து அடித்து உதைத்தனர். இது தொடர்பாக இருதரப்பினரையும் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோஷ்டி மோதல்
சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் துரைப்பாக்கம் பாண்டியன் நகரைச் சேர்ந்த சக்தி விக்னேஷ் (வயது 18), 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய அண்ணன் பழனிவேல், அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
சக்தி விக்னேஷூடன் படிக்கும் நண்பர் நிஷாந்த் என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரி வளாகத்தில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். அப்போது அதே கல்லூரியில் 3-ம் ஆண்டு படிக்கும் ஜானி என்பவர் இதனை கண்டித்து நிஷாந்தை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுபற்றி நிஷாந்த், தனது நண்பர் சக்தி விக்னேஷிடம் கூறினார். இதையடுத்து நிஷாந்த், சக்தி விக்னேஷ் மற்றும் அவருடைய அண்ணன் பழனிவேல் ஆகிய 3 பேரும் இதுபற்றி ஜானியிடம் தட்டிக்கேட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, கோஷ்டி மோதலாக மாறியது.
கட்டி வைத்து அடி-உதை
ஜானி தன்னுடன் படிக்கும் 8 மாணவர்களுடன் சேர்ந்து அண்ணன்-தம்பி உள்பட 3 பேரையும் சரமாரியாக தாக்கினார். பின்னர் ஜானி மற்றும் அவருடைய நண்பர்கள் சக்தி விக்னேஷ், அவருடைய அண்ணன் பழனிவேல் இருவரையும் மோட்டார்சைக்கிளில் கடத்திச்சென்று ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை ஷாலிமர் கார்டன் பகுதியில் கட்டி வைத்து அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இது பற்றி துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தரப்பட்டது. உடனடியாக போலீஸ் உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் வளர்மதி ஆகியோர் விரைந்து சென்று அண்ணன்-தம்பி 2 பேரையும் மீட்டனர்.
9 பேர் கைது
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானி, அவருடைய நண்பர்களான கார்த்திக், விக்னேஷ், லோகேஷ்வரன், ஜெகன்நாத் மற்றும் இரு இளஞ்சிறார்கள் ஆகியோரை கைது செய்தனர்.
அதேபோல் ஜானி தரப்பில் மாணவர் கார்த்திக் அளித்த புகாரின்பேரில் துரைபாக்கம் போலீசார் மற்றொரு வழக்குப்பதிவு செய்து சகோதரர்கள் சக்தி விக்னேஷ், பழனிவேல் ஆகியோரையும் கைது செய்தனர்.
பின்னர் கைதான இருதரப்பினரையும் சேர்ந்த 9 மாணவர்களையும் ேகார்ட்டில் ஆஜர்படுத்தினர். அதில் 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். 2 இளஞ்சிறார்கள் நீதிமன்ற உத்தரவின்படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக துரைப்பாக்கம் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






