திருவள்ளூர் மாவட்டத்தில் 84 சதவீதம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளனர்: திருவள்ளூர் கலெக்டர்
திருவள்ளூர் மாவட்டத்தில் 84 சதவீதம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
திடீர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. இதனையடுத்து மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது முககவசம் அணியாதவர்களுக்கு முககவசம் வழங்கினார். மேலும், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
விழிப்புணர்வு
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாலுகா அளவில், கோட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.மேலும் விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் அனைவரும் தொற்று பரவாமல் தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முககவசம் அணிந்து கொள்ள வேண்டும்.
தடுப்பூசி
திருவள்ளூர் மாவட்டத்தில் 84 சதவீதம் பேர் முதல் தவணையும், 55 சதவீதம் பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.தடுப்பூசி செலுத்திக் கொள்ள தவறியவர்கள் உடனடியாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது ஆபத்தான சூழ்நிலை ஏதுவுமில்லை. போதுமான படுக்கை வசதி உள்பட அனைத்து மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேரில் ஆய்வு
பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இதேபோல் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தொடர்பான தகவலுக்கான ஏற்படுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரியின் முதல்வர் அரசி, சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story