இன்று முதல் விசைத்தறியாளர்கள் போராட்டம்
இன்று முதல் விசைத்தறியாளர்கள் போராட்டம்
சுல்தான்பேட்டை
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. விசைத்தறி உரிமையாளர்களுக்கு ஜவுளி உற்பத்தியாளர்களால் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்,கடந்த 2014-ம்ஆண்டு முதல் கூலி உயர்வு ஜவுளி உற்பத்தியாளர்கள் வழங்கவில்லை.
இதனையடுத்து, புதிய கூலி உயர்வை அமல்படுத்த கோரி திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.திருப்பூரில் அமைச்சர் சாமிநாதன்மற்றும் கலெக்டர் முன்னிலையில் கூலி உயர்வு ஒப்பந்தம் சமீபத்தில்இறுதி செய்யப்பட்டது.
அதன்படி சோமனூர் ரகங்களுக்கு 23 சதவீதம் மற்ற இதர ரகங்களுக்கு20 சதவீதம் கூலி உயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால்,கூலி உயர்வு அமல் படுத்தாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் (ஞாயிற்றுக்கிழமை) தங்கள் தறிகளை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.இதுகுறித்து விசைத்தறி சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள பல்லடம், சோமனூர், அவினாசி, தெக்கலூர், மங்கலம், 63.வேலம்பாளையம், பெருமாநல்லூர், கண்ணம்பாளையம், புதுப்பாளையம் ஆகிய 9 சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்கள் புதிய கூலி உயர்வை அமல்படுத்த வலியுறுத்தி இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றன.
2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகளை நிறுத்தி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.பல்லடம் சங்கத்துடன் சுல்தான்பேட்டை விசைத்தறியாளர்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்த வேலை நிறுத்தத்தால் விசைத்தறி, சைசிங், நூற்பாலைகள், ஓ.இ.மில்கள், பீஸ் மடிப்பு மற்றும் போக்குவரத்து பாதிக்கப்படும். இதனால் பல லட்சம்தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தற்காலிகமாக வேலை இழப்பார்கள்.தினசரி ரூ.50 கோடி மதிப்பிலான ஒரு கோடிமீட்டர் துணிகள் உற்பத்தி இழப்பு ஏற்படும்.
எனவே, விசைத்தறியாளர்கள், தொழிலாளர்கள் நலன் கருதி ஜவுளி உற்பத்தியாளர்கள் புதிய கூலி உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறுஅவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story