ரேஷன் கடைகள் மூடல்
ரேஷன் கடைகள் மூடல்
பொள்ளாச்சி
பொங்கல் பண்டிகையையொட்டி பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய் உள்ளிட்ட 21 வகை பொருட்கள் கொண்ட பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் கூட்ட நெரிசலை தடுக்க வீடு, வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 4-ந்தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் பொள்ளாச்சி நகரில் சில இடங்களில் கடந்த 3 நாட்களாக ரேஷன் கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்கள் தினமும் கடைகளுக்கு சென்று அலைக்கழிக்கப்படுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
தமிழக அரசு பொங்கல் பரிசு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி கடந்த 4-ந்தேதி முதல் 2 நாட்கள் மட்டுமே ரேஷன் கடைகளில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. சில ரேஷன் கடைகளில் மட்டும் பொருட்கள் வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மற்ற ரேஷன் கடைகளை மூடி விட்டு சென்று விட்டனர். மேலும் கடைக்கு முன் சிறியதாக விற்பனையாளர் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு சென்று உள்ளார் என்று மட்டும் எழுதப்பட்டு உள்ளது.
இதனால் பொதுமக்கள் கடந்த 3 நாட்களாக ரேஷன் கடைக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். இதுகுறித்து கடை ஊழியர்களிடம் கேட்டால் பொங்கல் பரிசு பொருட்கள் தொகுப்பு வாங்க சென்றதாக கூறுகின்றனர். பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதை தடுக்க குறிப்பிட்ட தேதி வரை கடை திறக்கப்படாது என்றும், கடை திறக்கும் போது பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று எழுதி வைத்திருக்கலாம். பொதுமக்கள் அடிக்கடி வந்து திரும்பி செல்ல மாட்டார்கள். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சிரமங்களை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகையில், கடைகளுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் 50 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டன. தற்போது அந்த பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு விட்டது. மீண்டும் பொங்கல் பரிசு பொருட்கள் வாங்குவதற்கு சென்றதால் கடை திறக்கவில்லை என்றும், அதற்குரிய காரணம் அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கப்பட்டு உள்ளது என்றனர்.
Related Tags :
Next Story