மாமல்லபுரம், வண்டலூரில் கலெக்டர் ஆய்வு


மாமல்லபுரம், வண்டலூரில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 10 Jan 2022 12:48 PM GMT (Updated: 10 Jan 2022 12:48 PM GMT)

மாமல்லபுரம், வண்டலூரில் கலெக்டர் ஆய்வு பணியில் ஈடுபட்டார்.

கலெக்டர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கருக்காத்தம்மன் கோவில் எதிரே கிழக்கு கடற்கரை சாலை ஒட்டி உள்ள 6½ ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரைபடம் தயாரிக்கப்பட்டு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.18 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. பின்னர் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் மாமல்லபுரத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் பஸ் நிலையம் அமைய உள்ள மாமல்லபுரம் கருக்காத்தம்மன் கோவில் எதிரில் இ.சி.ஆர். சாலையை ஒட்டி ஏற்கனவே தமிழக அரசால் ஆய்வு செய்து ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை வருவாய்த்துறை, பேரூராட்சி துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவருடன் மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், வருவாய் அலுவலர் ரகு, கிராம நிர்வாக அலுவலர் நரேஷ்குமார், மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் வந்திருந்தனர்.

வண்டலூர்

பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அரிசி வாங்கும் அனைத்து ரேஷன்கார்டு தாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வண்டலூர் ஊராட்சியில் உள்ள ஒரு ரேஷன் கடைக்கு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் திடீரென சென்று பொங்கல் தொகுப்பு பை சரியாக வழங்கப்படுகிறதா? என்பதை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் ரேஷன் கடைக்கு வந்து இருந்த பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பையை கலெக்டர் வழங்கினார். அப்போது அவருடன் தாம்பரம் வருவாய் ஆர்.டி.ஓ. அறிவுடைநம்பி, வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு துணைத்தலைவர் ஆராமுதன், வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்செல்வி விஜயராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story