தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 10 Jan 2022 9:25 PM IST (Updated: 10 Jan 2022 9:25 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-




தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:- 

சாலையில் சுற்றும் மாடுகள் 

கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே மெயின்ரோட்டில் மாடுகள் சுற்றி திரிகிறது. இதனால் அந்தப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது.  இதேபோல் பல இடங்களில் சாலைகளில் மாடுகள் மற்றும் கால்நடைகள் சுற்றி திரிகின்றன. எனவே விலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகள் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நந்தகுமார், கோவை. 

செல்போன்கள் செயலிழப்பு

கூடலூர் பகுதியில் செல்போன் அலைவரிசை சேவை மற்றும் தொலை பேசிகள் பெரும்பாலும் செயல்படுவதில்லை. இது சம்பந்தமாக பலமுறை புகார் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. இதனால் அத்தியாவசிய மற்றும் அவசரத் தேவைகளுக்கு தகவல் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவசுப்பிரமணியன், கூடலூர்.

வாக்காளர் பட்டியலில் குளறுபடி

பொள்ளாச்சியை அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பழைய 3-வது வார்டு, தற்போது 11, 14, 15 ஆகிய வார்டுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு வார்டில் 350 வாக்காளர்கள் மட்டுமே இடம் பெற்று உள்ளனர். மேலும் இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படாமலும், ஒரு பெயர் 2 இடங்களில் இடம் பெற்று பெரும் குளறுபடியுடன் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் எடுத்து கூறியும் வாக்காளர் பட்டியல் சரிசெய்யப்பட வில்லை. எனவே தேர்தல் பிரிவு உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவா, சூளேஸ்வரன்பட்டி

பயணிகள் அவதி

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் உடுமலை சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்நிலை திடல் பகுதியில் பணிகள் முடிந்தும் பஸ் நிறுத்தம் அமைக்கவில்லை. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே பயணிகள் நலன் கருதி தேர்நிலை திடலில் பஸ் நிறுத்தம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேந்திரன், பொள்ளாச்சி.

விபத்து ஏற்படும் அபாயம்

சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி மலையில் இருந்து ஜே.கிருஷ்ணா புரம் செல்லும் வழியில் பல இடங்களில் தென்னை மரங்களின் மட்டைகள் ரோட்டில் பயணம் செய்யும் பயணிகள் மீது விழும் நிலையில் சாய்ந்து தொங்குகிறது. சில இடங்களில் தென்னை மட்டைகள் மின்கம்பிகளில் உரசியபடி உள்ளது. இதன் காரணமாக விபத்து ஏற்படும் வாய்ப்பு நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள தென்னை மட்டைகளை அகற்ற வேண்டும். 
ராஜன், பெதப்பம்பட்டி.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கோவை மாநகராட்சி 21-வது வார்டு கோகுலம் காலனி பி.என்.புதூர் ஆகிய பகுதிகளில் சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அதை முறையாக சுத்தம் செய்யாததால் அவை அங்கு குவிந்து கிடக்கிறது. காற்று வீசும்போது அவை காற்றில் பறந்து வீடுகளுக்குள் விழுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
சந்திரன், கோவை. 

போக்குவரத்து நெரிசல்

கோவை திருச்சி ரோட்டில் உள்ள வசந்தா மில் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது.  இதனால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு சிக்னல் அமைக்கவோ அல்லது போக்குவரத்து போலீசாரை பணியில் நியமிக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அருண்ராஜ், கோவை. 

தினத்தந்தி செய்தி எதிரொலி:
மின்விளக்குகள் சரிசெய்யப்பட்டது

கோவை கணபதியை அடுத்த மணியக்காரபாளையம் வாசவி வீதி, ராமனுகவுண்டர் வீதி ஆகிய பகுதிகளில் மின்விளக்குகள் ஒளிரவில்லை. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அவற்றை சரிசெய்தால் ஒளிர்ந்து வருகிறது. எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி. மேலும் இந்த பகுதியில் 5 மின்விளக்குகள் தற்போது பழுதாகி உள்ளது. அதையும் சரிசெய்ய வேண்டும்.
சதீஷ், மணியக்காரபாளையம். 

குண்டும் குழியுமான சாலை

கோவை வெங்கிட்டாபுரம் டி.வி.எஸ். நகரில் உள்ள சாலை மிகவும் பழுதாகி உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அடிக்கடி விபத்துகளும் நடப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பித்து செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
கவுதம்தேவ், வெங்கிட்டாபுரம். 

ஒளிராத தெருவிளக்குகள்

சூலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து போலீஸ் நிலையம் வரை சாலையில் உள்ள தெருவிளக்குகள் சரியாக ஒளிருவது இல்லை. இதனால் இரவில் அங்கு இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் குற்ற சம்பவங்கள் நடக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஒளிராத தெருவிளக்குகளை ஒளிர செய்ய வேண்டும்.
மணிகண்டன், சூலூர். 


Next Story