மின்சார ரெயில்களில் பயணிகள் 2 தவணை தடுப்பூசி போட்டுள்ளனரா? ரெயில்வே அதிகாரிகள் சோதனை


மின்சார ரெயில்களில் பயணிகள் 2 தவணை தடுப்பூசி போட்டுள்ளனரா? ரெயில்வே அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 11 Jan 2022 3:01 PM IST (Updated: 11 Jan 2022 3:01 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மின்சார ரெயில் பயணிகள் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனரா? என ரெயில்வே அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

2 தவணை தடுப்பூசி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னையில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய பொதுப்போக்குவரத்தான மின்சார ரெயில் பயணிகளுக்கும் தெற்கு ரெயில்வே சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே நேற்று முதல் மின்சார ரெயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டது.

அதிகாரிகள் சோதனை

இதையடுத்து நேற்று மின்சார ரெயில் பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனரா? என சோதனை மேற்கொள்ள தெற்கு ரெயில்வே சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ரெயில்வே அதிகாரிகள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் ரெயில் நிலைய முகப்பு, நடைமேடையில் பயணிகளை சோதனை செய்வதற்காக தயார் நிலையில் இருந்தனர். அவர்கள் மின்சார ரெயில் பயணம் மேற்கொள்ள வந்தவர்களிடம் 2 தவணை தடுப்பூசி போட்ட சான்றிதழ் உள்ளதா? என சோதனை மேற்கொண்டனர்.

இதில் 2 தவணை தடுப்பூசி போட்ட சான்றிதழ் வைத்திருப்பவர்களை மட்டுமே பயணம் மேற்கொள்ள அனுமதித்தனர். மேலும் டிக்கெட் பரிசோதகர்கள் மின்சார ரெயிலிலும் பயணிகளிடம் 2 தவணை தடுப்பூசி போட்டுள்ளனரா? என சோதனை மேற்கொண்டனர். மின்சார ரெயிலில் பயணம் மேற்கொள்ள வழங்கப்படும் சீசன் டிக்கெட்களில் தடுப்பூசி போட்ட சான்றிதழில் உள்ள அடையாள எண்ணையும் நேற்று முதல் அச்சடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story