கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரிப்பால் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து
கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரிப்பால் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற இருந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பெட்டியில் மனுக்களை பொதுமக்கள் போட்டுச் சென்றனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தமிழகத்தில் கடந்த 6 நாட்களாக கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை அறிவித்தார்.
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களை கண்டிப்பாக மூட வேண்டுமெனவும், தியேட்டர்கள், ஓட்டல்களில் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில், கலெக்டர் அலுவலகங்களில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
கலெக்டர் அறிவிப்பு
மேலும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து குறைதீர் நாள் கூட்டங்கள் தற்காலிகமாக மறு உத்தரவு வரும் வரை ஒத்தவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து நேற்று திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுவது ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்திருந்தார்.
மேலும் இது பற்றி அறியாமல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களுக்கு ஏதுவாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற புகார் பெட்டி வைக்கப்பட்டு இருந்தது.
அங்கு போடப்படும் பொதுமக்களின் மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story