மார்க்கெட்டுக்கு கரும்பு வரத்து குறைந்தது


மார்க்கெட்டுக்கு கரும்பு வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 12 Jan 2022 5:17 PM GMT (Updated: 12 Jan 2022 5:17 PM GMT)

பொள்ளாச்சியில் மார்க்கெட்டுக்கு கரும்பு வரத்து குறைந்தது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் மார்க்கெட்டுக்கு கரும்பு வரத்து குறைந்தது.

பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை(வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து கரும்பு கொண்டு வரப்பட்டு உள்ளது. இங்கிருந்து பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகள், பக்கத்து மாநிலமாக கேரளாவுக்கு கரும்பு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே மார்க்கெட்டுக்கு கரும்பு கொண்டு வரப்படும்.

ஆனால் இந்த ஆண்டு நேற்று முன்தினம்தான் லாரிகளில் கொண்டு வரப்பட்டன. வரத்து குறைந்தும் விற்பனை இல்லாததால் விலை உயரவில்லை. இதுகுறித்து கரும்பு மொத்த வியாபாரிகள் கூறியதாவது:- பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு சேலம், நத்தம் பகுதிகளில் இருந்து கரும்பு கொண்டு வரப்பட்டு உள்ளது. 

ஒரு கட்டு ரூ.450

வழக்கமாக பொங்கல் பண்டிகையையொட்டி மார்க்கெட்டுக்கு 15 லோடு கரும்பு கொண்டு வரப்படும். ஒரு லோடுக்கு 5 ஆயிரம் கரும்புகள் லாரியில் வரும். மேலும் ஒரு வாரத்திற்கு முன்பே கரும்பு கொண்டு வரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த ஆண்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதனால் நேற்று (நேற்று முன்தினம்) தான் கரும்புகள் கொண்டு வரப்பட்டன. அதுவும் 2 லோடு தான் வந்து உள்ளன. கடந்த ஆண்டு வரத்து அதிகமாக இருந்தும் ஒரு கட்டு ரூ.600 வரை விலை போனது.  இந்த ஆண்டு ரூ.450-க்கு தான் விற்பனை ஆகிறது. 

மேலும் கோவில்கள் மூடப்பட்டதாலும், திருவிழாக்கள் நடைபெறாததாலும் கரும்பு விற்பனை குறைந்து உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். வால்பாறையில் கரும்பு, மஞ்சள், காப்பு கட்டுவதற்கு பயன்படும் வேப்பிலை, பூலப்பூ உள்ளிட்ட பொருட்கள் விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது. ஒரு கரும்பு ரூ.50-க்கும், வேப்பிலை மற்றும் பூலப்பூ அடங்கிய கட்டு ரூ.20-க்கும் விற்கப்படுகிறது. 

கூடுதல் பஸ்கள்

பொங்கல் பண்டிகையையொட்டி வால்பாறையில் இருந்து வெளியூர்களுக்கு 6 சிறப்பு பஸ்களும், தேவைப்பட்டால் எஸ்டேட் பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.வால்பாறையில் நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. எனினும் பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூர்களில் இருந்து பலரும் வர தொடங்கி உள்ளனர். இதனால் காந்திசிலை பஸ் நிறுத்தம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வு மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.


Next Story