திருட முயன்றதாக கூறி வடமாநில வாலிபர் அடித்துக் கொலை
திருட முயன்றதாக கூறி வடமாநில வாலிபர் அடித்துக் கொலை
பேரூர்
கோவை அருகே திருட முயன்ற வடமாநில வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
திருட முயற்சி
கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள சித்திரைச்சாவடி தெற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 55). விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தில் உள்ள வீட்டில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் விசுவநாதன் (வயது 30), மருமகன் சம்பத்குமார் (36) இவர்களும் மணியுடன் தங்கியிருந்து தோட்ட வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவில் யாரோ ஒருவர் கதவை தட்டும் சத்தம் கேட்டது. இதையடுத்து விசுவநாதனும், சம்பத்குமாரும் எழுந்து கதவை திறந்தனர்.
அப்போது, அறையின் வெளியே வடமாநில வாலிபர் ஒருவர் குடிபோதையில் நின்று கொண்டிருந்தார். மேலும் அவர் தோட்டத்தில் உள்ள பொருட்களை திருட முயன்றதாக கூறப்படுகிறது.
மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்
இதையடுத்து விசுவநாதனும், சம்பத்குமாரும் ஓட முயன்ற அந்த வாலிபரை விரட்டி பிடித்து தென்னை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. பின்னர் இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் வடமாநில வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
ஆனால் அவர் இந்தியில் பேசியதாலும், குடிபோதையில் இருந்ததாலும் அவர் கூறியது புரியவில்லை.
இதையடுத்து போலீசார் அவரை காலையில் வந்து அழைத்து செல்வதாகவும், அதுவரை இங்கேயே இருக்கட்டும் என்று கூறிவிட்டு சென்றனர்.
பிணமாக மீட்பு
இந்த நிலையில் நேற்று காலை பூலுவம்பட்டி-தென்மநல்லூர் செல்லும் ரோட்டில் உள்ள நொய்யல் ஆற்று பகுதியில் வடமாநில வாலிபர் பிணமாக கிடந்தார். இதனைக்கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் உடனடியாக அங்கு விரைந்து வந்து வடமாநில வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
10 பேர் கைது
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் திருடன் என கருதி வடமாநில வாலிபரை அடித்துக்கொன்று, உடலை நொய்யல் ஆற்று பகுதியில் வீசியது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த விசுவநாதன், சம்பத்குமார், காளியப்பன், துரைசாமி, கார்த்திக், கணேசன், ஜெகநாதன், பொன்னுச்சாமி, ஜோதிராஜ், சரவணகுமார் ஆகிய 10 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களை சிறையில் அடைத்தனர்.இறந்த வடமாநில வாலிபரின் பெயர், விவரம் உடனடியாக தெரியவில்லை. இதனால் அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story