சுகுணாபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட போலீஸ் சோதனைச்சாவடி திறப்பு
சுகுணாபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட போலீஸ் சோதனைச்சாவடி திறப்பு
கோவை
குனியமுத்தூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சுகுணாபுரத்தில் போலீஸ் சோதனைச்சாவடி உள்ளது. இந்த நிலையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பிரதீப் குமார் பொறுப்பேற்ற பின்னர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது சுகுணாபுரம் சோதனைச்சாவடி மிகவும் பழைய கட்டிடமாக காட்சியளித்ததை கண்டு உடனே அதை புதுப்பிக்க உத்தரவிட்டார். அதன் பேரில் அந்த சோதனைச்சாவடி புதுப்பிக்கப்பட்டு, நேற்று காலை 11 அளவில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் மூலம் திறந்து வைக்கப்பட்டது. இந்த சோதனைச்சாவடியில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் துணை கமிஷனர் உமா, குனியமுத்தூர் சரக உதவி கமிஷனர் ரகுபதி ராஜா, குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து கோவை பாலசுந்தரம் சாலையில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து பயிற்சி பூங்காவின் 5-வது ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவில் போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் கலந்துகொண்டார். அவர் பேசும்போது “போக்குவரத்து பூங்காவை பார்வையிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நகரில் மிகச்சிறப்பாக சாலை பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதில் காவல் துறை முக்கியப் பங்கு வகிக்குமென்று உறுதியளிக்கிறேன்” எனத் தெரிவித்தார். இதுவரை இந்த பூங்காவை 1 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகள் பார்வையிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story