பொங்கல் பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்


பொங்கல் பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம்
x
தினத்தந்தி 13 Jan 2022 4:25 PM GMT (Updated: 13 Jan 2022 4:25 PM GMT)

பொள்ளாச்சி, வால்பாறையில் பொங்கல் பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். மேலும் வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்ந்தது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி, வால்பாறையில் பொங்கல் பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். மேலும் வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்ந்தது.

விற்பனை மந்தம்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று(வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொள்ளாச்சி சத்திரம் வீதி, காந்தி மார்க்கெட், தேர்நிலை திடல், திரு.வி.க. மார்க்கெட் ஆகிய இடங்களில் பூக்கள், மஞ்சள், கரும்புகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சென்றனர். மேலும் வீடுகளில் காப்பு கட்டுவதற்கு ஆவாரம் பூ, பூளைப்பூக்களை வாங்கினர்.

பொள்ளாச்சி சத்திரம் வீதி மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைந்து இருந்தது. இதன் காரணமாக பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. இதனால் விற்பனை மந்தமாக இருந்தது. 

ஜோடி கரும்பு ரூ.100

அதிகபட்சமாக மல்லிகை பூ கிலோ ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று ஒரு ஜோடி கரும்பு ரூ.100-க்கும், மஞ்சள் ஒரு ஜோடி ரூ.30-க்கும், ஆவாரம் மற்றும் பூளைப்பூக்கள் கொண்ட ஒரு கட்டு ரூ.20-க்கும் விற்பனை ஆனது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:- 
பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் வெளியூர்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் பூக்கள் வரத்து குறைந்து உள்ளது. 

வழிபாட்டுக்கு தடை

வழக்கமாக பொள்ளாச்சிக்கு பொங்கல் பண்டிகையையொட்டி 5 டன் வரை பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் வரத்து குறைவு காரணமாக 2 டன் பூக்கள்தான் கொண்டு வரப்பட்டன. மேலும் கோவில்களில் பக்தர்கள் வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் பூக்கள் விற்பனை மந்தமாக இருந்தது.

ஒரு கிலோ மல்லிகை ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை, முல்லை ரூ.1,400 முதல் ரூ.1,700 வரை, ஜாதிப்பூ ரூ.1,000 முதல் ரூ.1,400 வரை, சம்பங்கி ரூ.120 முதல் ரூ.140 வரை, அரளி ரூ.300 முதல் ரூ.350 வரை, செவ்வந்தி ரூ.200 முதல் ரூ.250 வரை, சில்லி ரோஜா ரூ.200 வரை விற்பனை ஆனது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

வால்பாறை

வால்பாறையில் உள்ள நகராட்சி மார்க்கெட் மற்றும் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து இருந்தது. அங்கு முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக நடந்து கொண்டவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் வெளியூர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை கண்காணிக்க எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.


Next Story