நெகமம் கால்நடை மருந்தகம் தரம் உயர்த்தப்படுமா?


நெகமம் கால்நடை மருந்தகம் தரம் உயர்த்தப்படுமா?
x
தினத்தந்தி 13 Jan 2022 4:25 PM GMT (Updated: 13 Jan 2022 4:25 PM GMT)

புதர் மண்டி கிடக்கும் நெகமம் கால்நடை மருந்தகம் தரம் உயர்த்தப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

நெகமம்

புதர் மண்டி கிடக்கும் நெகமம் கால்நடை மருந்தகம் தரம் உயர்த்தப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். 

கால்நடை மருந்தகம்

நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மேலும் கால்நடை வளர்ப்பிலும் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் அங்கு பால் உற்பத்தி அதிகமாக உள்ளது. 
இதை கருத்தில் கொண்டு கால்நடைகளின் நலன் கருதி கடந்த 1958-ம் ஆண்டு நெகமத்தில் கால்நடை மருந்தகம் தொடங்கப்பட்டது. இதனை நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள 12-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தி வந்தனர்.

தற்காலிக டாக்டர்

இதற்கிடையில் பொள்ளாச்சி கோட்டத்தில் ஒவ்வொரு ஒன்றியங்களிலும் 2 கால்நடை மருத்துவமனைகள் தொடங்கப்பட்டன. ஆனால் கிணத்துக்கடவு ஒன்றியத்தில் மட்டும் கால்நடை மருத்துவமனை தொடங்கப்படவில்லை. மேலும் நெகமத்தில் உள்ள கால்நடை மருந்தகத்தில் பணியாற்றிய டாக்டர்கள், உதவியாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதனால் அங்கு ராசக்காபாளையத்தில் இருந்து கால்நடை டாக்டர் ஒருவர் மட்டும் தற்காலிகமாக வந்து செல்கிறார். 

தரம் உயர்த்த வேண்டும்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
நெகமத்தில் உள்ள கால்நடை மருந்தகம் அதிகாரிகளால் கண்டு கொள்ளப்படுவது இல்லை. இந்த வளாகத்தை சுற்றிலும் புதர் செடிகள் அடர்ந்து உள்ளன. அங்குள்ள இரும்பு கதவு உடைந்து கிடக்கிறது. மேலும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் புகலிடமாக விளங்குகிறது.

அங்கு நிரந்தர டாக்டர் பணியில் இல்லை. இதனால் கால்நடைகளுக்கு நோய் ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க முடியவில்லை. எனவே அந்த கால்நடை மருந்தகத்தை உரிய முறையில் பராமரித்து மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story