கோவையில் ஒரே நாளில் 1162 பேருக்கு கொரோனா


கோவையில் ஒரே நாளில் 1162 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 Jan 2022 4:38 PM GMT (Updated: 13 Jan 2022 4:38 PM GMT)

கோவையில் ஒரே நாளில் 1162 பேருக்கு கொரோனா

கோவை

கோவை மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 1,162 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

பாதிப்பு அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கோவையில் கடந்த 10-ந் தேதி 602 பேருக்கும், 11-ந் தேதி 863 பேருக்கும், நேற்று முன்தினம் 863 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் சுகாதார துறையினர் வெளியிட்ட பட்டியல் படி நேற்று கோவையில் 1,162 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 59 ஆயிரத்து 580 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 293 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 

இதையடுத்து கோவையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 51 ஆயிரத்து 862 ஆக உயர்ந்து உள்ளது. கோவையில் தற்போது 5 ஆயிரத்து 190 பேர் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

கண்காணிப்பு தீவிரம்

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பரவல் 5 சதவீதம் என்ற அளவில் இருந்தது. தற்போது கொரோனா பரவல் 10 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இனி வரும் வாரங்களில் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதார துறையினர் தெரிவித்து உள்ளனர்.

கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. வடக்கு மண்டல பகுதியில் கொரோனா தொற்று குறைவாக காணப்படுகிறது.

 மேலும் மாநகராட்சி பகுதியில் முகக்கவசம் அணியாத பொதுமக்கள், கடைக்காரர்கள் உள்ளிட்டோருக்கு அபராதம் விதிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதுடன், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Next Story