மாவட்ட செய்திகள்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு + "||" + Tiruvallikeni Parthasarathy Temple Sorgavasal Thirappu

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், தியாகராயநகர் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி சொர்க்கவாசல் நேற்று திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சொர்க்கவாசல் திறப்பு

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா, கடந்த 3-ந்தேதி திருமொழித்திருநாள் உடன் தொடங்கி கடந்த 12-ந்தேதி வரை பகல் பொழுதில் நடக்கும் பகல்பத்து திருவிழா நடந்தது. தொடர்ந்து, முக்கிய திருவிழாவான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதிகாலை 4.15 மணிக்கு பார்த்தசாரதி பெருமாள் உபயநாச்சியார்களுடன் உள்பிரகார புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் பரமபதவாசல் அருகே பார்த்தசாரதி பெருமாள் உபயநாச்சியார்களுடன் அருள்பாலித்தார்.

அப்போது கோவிந்தா.. கோவிந்தா... என பக்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனுக்கு மரியாதை நிகழ்ச்சி நடந்தது. இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், இணை-கமிஷனர் தா.காவேரி உள்பட பலர் கலந்துகொண்டார்.

இணையதளத்தில் ஒளிபரப்பு

தொடர்ந்து காலை 6.15 மணியிலிருந்து நேற்று இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து வருகிற 23-ந்தேதி திருவாய்மொழித்திருநாள் இரவில் நடக்கும் ராப்பத்து திருவிழாவாக நடக்கிறது. இதில் வருகிற 18-ந்தேதி வரை கொரோனா, ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால் நிகழ்ச்சிகள் இணையதளத்தில் ஒளிரப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம்

தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் வெங்கடேசபெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பையொட்டி கோவில் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை 6 மணியிலிருந்து இடையிடையே நெய்வேத்தியத்திற்கு திரையிடப்பட்டாலும், இரவு 9 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். முககவசம் இல்லாதவர்களுக்கு கோவில் சார்பில் வழங்கப்பட்டது.

புத்தாண்டை போல் இல்லாமல் கூட்டம் சற்று குறைவாக இருந்ததால் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை உள்ளுர் ஆலோசனைக்குழு தலைவர் ஏ.ஜெ.சேகர்ரெட்டி, தேவஸ்தானம் அதிகாரிகள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

ஆண்டாள் திருக்கல்யாணம்

புரசைவாக்கம், வெள்ளாளர் தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பையொட்டி கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. போகி பண்டிகையை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் என்.கங்காதரன் செய்திருந்தார்.

இதேபோன்று, மயிலாப்பூரில் உள்ள மாதவப்பெருமாள், ஆதிகேசவப்பெருமாள் கோவில், திருநீர்மலை நீர்வண்ண் பெருமாள் கோவில், வில்லிவாக்கம் சவுமியா தாமோதர பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்று அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு கருதி அனைத்து கோவில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

வீடியோ படம் எடுத்த போலீசார்
பெருமாள் கோவில்களில் நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகளில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களும், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் கலந்த கொள்ள வேண்டாம் என்று அறநிலையத்துறை சார்பில் கேட்டு கொள்ளப்பட்டது. நள்ளிரவிலும் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால், கடந்த ஆண்டுகளை போன்று பெரிய அளவில் கோவில்களில் தள்ளுமுள்ளு எதுவும் ஏற்படவில்லை. பக்தர்களும் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியே தரிசனம் செய்தனர். அரசு விதித்த வழிகாட்டி நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுகிறார்களா? என்தை அறிந்து கொள்வதற்காக போலீசார் பல்வேறு பெருமாள் கோவில்களில் திரண்டு இருந்த பொதுமக்கள் மத்தியில் வீடியோ படம் எடுத்தனர். முககவசம் அணியாத ஒரு சிலரை முககவசம் அணியுமாறும் போலீசார் அறிவுரை வழங்கினார்கள்.