வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.33 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி கூடம்


வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.33 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி கூடம்
x
தினத்தந்தி 14 Jan 2022 10:19 PM GMT (Updated: 14 Jan 2022 10:19 PM GMT)

வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.33 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி கூடம் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

வாலாஜாபாத்,

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்திடும் வகையில் அரசு ஆஸ்பத்திரிகளில் தேவையான மருத்துவ முன்னேற்பாடுகளை செய்து வைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியில் 60 படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது.

இந்த அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 20 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பயன்படுத்த தனியார் தொழிற்சாலையின் சமூக பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சம் செலவில் நிமிடத்திற்கு 250 லிட்டர் ஆக்சிஜனை தயாரிக்கும் வகையில் புதியதாக ஆக்ஸிஜன் உற்பத்தி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. புதியதாக அமைக்கப்பட்ட ஆக்ஸிஜன் உற்பத்தி கூடத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

வாலாஜாபாத் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கலந்து கொண்டு புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி கூடத்தை நோயாளிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் உத்திரமேரூர் எம்.எல்.ஏ. க.சுந்தர், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ஜீவா, குடும்ப நலம் துணை இயக்குனர் விஜயகுமார், வாலாஜாபாத் பேரூராட்சி செயலாளர் பாண்டியன், ஓன்றிய குழு துணைத் தலைவர் சேகர், தனியார் நிறுவன மேலாளர்கள் சேகர், சுரேஷ்குமார், கார்த்திக், விஜயலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story