தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 15 Jan 2022 3:40 PM GMT (Updated: 15 Jan 2022 3:40 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு


ஆபத்தான பள்ளம் 

கோவை புட்டுவிக்கி ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த ரோட்டில் உள்ள கபர்ஸ்தானம் அருகே பாதாள சாக்கடை கான்கிரீட் தளம் உடைந்து 5 அடி பள்ளம் உள்ளது. அந்த வழியாக நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலை உள்ளது. எனவே விபத்து ஏதும் நடப்பதற்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்து பொதுமக்களை காப்பாற்ற வேண்டும்.
 முஸ்தபா, செல்வபுரம்.

எச்சரிக்கை பலகை வேண்டும்

  பொள்ளாச்சி மெயின்ரோட்டில் காட்டம்பட்டி அருகில் இருந்து பல்லடம் ரோடு, செஞ்சேரிமலைக்கு சாலைகள் பிரிந்து செல்கின்றன. ஆனால் இந்த சாலையில் வேகத்தடை இல்லை. எச்சரிக்கை பலகையும் இல்லை. இதனால் இங்கு விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் உடனடியாக எச்சரிக்கை பலகையோ அல்லது வேகத்தடையோ அமைக்க வேண்டும்.
  சலீம், பொள்ளாச்சி.

குண்டும் குழியுமான ரோடு

  கோவை 94-வது வார்டு பொள்ளாச்சி மெயின் ரோட்டில் சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயத்துடன் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
  செல்வராஜ், குறிச்சி.

சாக்கடை கால்வாய் சீரமைக்கப்படுமா?

  கோவை லட்சுமி மில் சந்திப்பில் இருந்து நவ இந்தியா செல்லும் சாலை யில் சாக்கடை கால்வாயில் மேல்பகுதியில் போடப்பட்டுள்ள சிமெண்ட் பலகைகள் உடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். மேலும் அவர்கள் அதற்குள் தவறி விழ வாய்ப்பு உள்ளது. எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பு அதிகாரிகள் அதை சரிசெய்ய வேண்டும்.
  செந்தில், பீளமேடு.

நிழற்குடை இல்லை

  கோவை டவுன்ஹால் அருகே உள்ள 5 கார்னரில் பஸ் நிறுத்தம் உள்ளது. இதில் நிழற்குடை வசதி இல்லை. இதனால் இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில் நின்று கால்கடுக்க காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அத்துடன் மழை பெய்தால் இங்கு காத்திருப்பவர்கள் பஸ் நிறுத்தத்தின் எதிரே செல்ல வேண்டிய நிலை உள்ளதால் பஸ் வந்ததும் ரோட்டை கடக்கும்போது விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு நிழற்குடை அமைக்க வேண்டும்.
  வாணி, பி.என்.புதூர்.

தெருநாய்கள் தொல்லை

  மேட்டுப்பாளையம் அன்னூர் ரோடு, டேங்மேடு, இமானுவேல் நகர் அருகே தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. கூட்டங்கூட்டமாக தெருவில் சுற்றும் நாய்கள் அந்த வழியாக செல்பவர்களை துரத்தி கடிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே தெருநாய்கள் தொல்லையில் இருந்து இந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்களை காப்பாற்ற வேண்டும்.
  அக்பர் அலி, மேட்டுப்பாளையம்.

குறுகலான சாலை

  பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் ராசாக்காபாளையம் மேட்டில் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அதில் பொள்ளாச்சியில் இருந்து வரும்போது மேடு ஏறி இறங்கும் இடத்தில் சாலை குறுகலாக உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. எனவே இதைத்தடுக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  மாதுகுட்டி, பொள்ளாச்சி.

வீணாகும் குடிநீர்

  கோவை கவுண்டம்பாளையம் கல்பனா தியேட்டர் அருகே மீனாட்சி நகரில் குடிநீர் குழாய் உடைந்து உள்ளதால் தண்ணீர் வீணாகி வருகிறது. குடிநீர் பற்றாக்குறையாக இருக்கும் இந்த நேரத்தில் குடிநீர் வீணாகி வெளியே செல்வது வேதனை அளிக்கிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து குடிநீர் வீணாவதை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
  முரளி, கவுண்டம்பாளையம்.

வாகன ஓட்டிகள் அவதி

  கோவை குனியமுத்தூர் மற்றும் கோவைப்புதூர் பகுதியில் தடை செய்யப்பட்ட நேரத்தில்கூட கனரக வாகனங்கள் வருவதுடன், அவை அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பயத்துடன் செல்லக்கூடிய நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  திருநாவுக்கரசு, கோவைப்புதூர்.

போக்குவரத்து நெரிசல்

  கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் பெருமாள் கோவில் வழியாக போக்குவரத்து மாற்றி விடப்பட்டு உள்ளன. இதனால் இங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே பாலப்பணி நடக்கும் வழியாக இருசக்கர வாகனங்களை அனுமதித்தால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது. அதை அதிகாரிகள் செய்ய முன்வர வேண்டும்.
  ஜெகதீஸ்பாபு, பெரியநாயக்கன்பாளையம்.
  


Next Story