மாவட்ட செய்திகள்

கோவையில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகை + "||" + Pongal festival celebrated enthusiastically in Coimbatore

கோவையில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகை

கோவையில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட பொங்கல் பண்டிகை
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் கோவையில் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
கோவை

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் கோவையில் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

பொங்கல் பண்டிகை

தமிழக மக்களால் பாரம்பரிய பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடப்படும். அதன்படி கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் தைப்பொங்கலும், 2-வது நாளான நேற்று மாட்டு பொங்கலும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தைப்பொங்கலையொட்டி நேற்று முன்தினம் வீடுகளில் காப்பு கட்டப்பட்டது. அதிகாலை முதலே பொங்கல் வைத்தனர். பல வகையான வர்ணம் தீட்டப்பட்ட புதுப்பானையில் விறகு அடுப்பு மூட்டி பொங்கல் வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சூரிய பகவானுக்கு பொங்கலை படையலிடப்பட்டு, தீபம் ஏற்றி வழிபாடு நடந்தது. பின்னர் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நேரிலும், சமூக வலைத்தளம் மூலமும் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர்.

மாட்டு பொங்கல்

இதையடுத்து விவசாயிகளுக்கு உறுதுணையாக, குடும்பத்தில் ஒருவராக இருக்கும் மாடுகளுக்காக நேற்று மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு பழைய கயிறுகள் அவிழ்க்கப்பட்டு, புது கயிறு கட்டப்பட்டன.

மேலும் கால்நடைகளை மஞ்சள் தண்ணீரில் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டப்பட்டது. தொடர்ந்து திருநீறு பூசப்பட்டு பொங்கல் படையல் வைக்கப்பட்டது. 

முத்தண்ணன் குளக்கரை

இதேபோல் கோவை முத்தண்ணன் குளக்கரை பகுதியில் நடந்த பொங்கல் விழாவில், அங்குள்ள கோவில் வாசலில் பொங்கல் பானைகளை வைத்து அந்த பகுதி மக்கள் கும்மியடித்து பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினர்.
ஆர்.எஸ். புரம் முதியோர் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பி.ஆர்.எஸ். மைதானத்தில் நடந்த பொங்கல் விழாவில், பாரம்பரிய வேட்டி சட்டை அணிந்து போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் கலந்து கொண்டார். சித்தாபுதூர் புதியவர் நகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.