குப்பை கிடங்கான நீர்வழித்தடம் சுத்தமானது

குப்பை கிடங்கான நீர்வழித்தடம், ‘தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சுத்தமானது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கோவை
குப்பை கிடங்கான நீர்வழித்தடம், ‘தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சுத்தமானது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கழிவுகள் நிறைந்த நீர்வழித்தடம்
கோவை சிங்காநல்லூர் குளம், 288 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. இதை சார்ந்து நூற்றுக்கணக்கான சிறு உயிரினங்கள், தாவரங்கள் உள்ளதாக ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது. பல்லுயிர் பெருக்கத்தின் முன்மாதிரியாக திகழும் இந்த குளம், தமிழகத்தின் முதல் நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சிங்காநல்லூர் குளத்தில் கழிவுநீர் கலந்து தண்ணீர் மாசுபடுகிறது. குறிப்பாக கோவை கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 73-வது வார்டு நஞ்சப்பா நகரில் சங்கனூர் ஓடையும், சிங்காநல்லுர் குளமும் இணையும் பகுதியில் உள்ள நீர்வழித்தடம் பிளாஸ்டிக் பொருட்கள் உள்பட கழிவுகள் நிறைந்து தண்ணீரே தெரியாத வகையில் நீரோட்டம் தடைபட்டு காணப்பட்டது. மேலும் கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் அதனருகில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
தூர்வாரும் பணி
இதன் எதிரொலியாக தற்போது அந்த நீர்வழித்தடத்தை ஆக்கிரமித்து கிடந்த கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன. இதனால் அங்கு தண்ணீர் சீராக செல்வதை காண முடிகிறது. மேலும் துர்நாற்ற பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்தது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, கடந்த சில நாட்களாக சங்கனூர் ஓடையை தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கதிரவன் கார்டனில் இருந்து ரெயில்வே பாதை வரையும், சங்கனூர் ஓடை-சிங்காநல்லூர் குளம் இணையும் நீர்வழித்தடமும் சுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. அங்கு கழிவுகள் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
தொடர் நடவடிக்கை
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடியும்போது, கோவை மாநகர பகுதியில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் உள்பட கழிவுகள் அந்த நீர்வழித்தடத்தில் வந்து சேகரமாகி விடுகிறது. அதன்பின்னர் யாரும் அதை கவனிப்பது இல்லை.
இதனால் கழிவுகள் மேலும் தேங்கி நீரோட்டம் தடைபட்டு விடுகிறது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு குளத்தில் உள்ள தண்ணீரும் மாசடைகிறது.தற்போது அந்த நீர்வழித்தடம் சுத்தம் செய்யப்பட்டு உள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு காரணமான ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி. அங்கு மீண்டும் கழிவுகள் தேங்காமல் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story






