உடல் சூட்டை தணிக்க ஆற்றில் குளித்த யானைகள்

வனப்பகுதியில் வெப்பம் அதிகரித்ததால் உடல் சூட்டை தணிக்க ஆற்றில் யானைகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தன.
பொள்ளாச்சி
வனப்பகுதியில் வெப்பம் அதிகரித்ததால் உடல் சூட்டை தணிக்க ஆற்றில் யானைகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தன.
உற்சாக குளியல்
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட வனவிலங்குகளும், அரிய வகை பறவை மற்றும் தாவர இனங்களும் உள்ளன. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் வறண்டுகிடந்த வனப்பகுதி பச்சை பசேலென மாறியது.
தற்போது மழை குறைந்ததால் வனப்பகுதி மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக பசுமை இழந்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து இருக்கிறது.
பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப் கோழிக்கமுத்தி முகாமில் உள்ள வளர்ப்பு மற்றும் கும்கி யானைகள் உடல் வெப்பத்தை தணிக்க அங்குள்ள ஆற்றில் இறங்கி துதிக்கையால் தண்ணீரை உடல் முழுவதும் தெளித்துக் கொள்கின்றன. பின்னர் ஆற்று நீரில் படுத்து உருண்டு உற்சாகமாக குளியல் போட்டன. இதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வெயிலின் தாக்கம்
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி காரணமாக வனப்பகுதி பசுமை இழந்து, ஆறுகள், தடுப்பணைகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் முகாமில் உள்ள யானைகள் உள்பட வனத்தில் உள்ள விலங்குகளும் நிழல் தரும் மரத்தின் அடியில் படுத்து ஓய்வெடுக்க தொடங்கி உள்ளன.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க யானைகள் ஆறுகள், குட்டைகளில் சேற்று நீரை தும்பிக்கையால் உடலில் தெளித்துக் கொண்டு, பின் சேற்றில் படுத்து உருண்டு குளியல் போடுகின்றன. தற்போது நிலவும் காலநிலையின் காரணமாக யானைகள் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்தும், கொசுக்கடியில் இருந்தும் எளிதாக தப்பித்துக்கொள்ள மண் குளியல் போடுகின்றன.
மேலும் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story






