தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 17 Jan 2022 5:10 PM GMT (Updated: 17 Jan 2022 5:10 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-


தினத்தந்தி புகார் பெட்டி பகுதிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:- 

வீணாக செல்லும் குடிநீர்

கூடலூர் ஹெல்த் கேம்ப், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் நகராட்சியின் மூலம் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி சாலையில் ஆறாக ஓடுகிறது. எனவே பழுதடைந்த குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய்கள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோடை காலம் தொடங்கி உள்ளதால் குடி நீர் வீணாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அய்யப்பன், கூடலூர்.

தார் சாலை அவசியம் 

  கோவை கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்து ரெயில் நிலைய சாலை, அரசு ஆஸ்பத்திரி வரை குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக சாலையோரத்தில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய் கள் பதிக்கப்பட்டன. வேலை முடிந்ததும் அங்கு தார்ரோடு அமைக்கவில்லை. இதனால் சாலையோரத்தில் மண் குவிந்து கிடப்பதால் காற்று வீசும்போது புழுதி பறக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அங்கு உடனடியாக தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  முஜிபுர் ரகுமான், கோவை.

விபத்தை ஏற்படுத்தும் சாலை

  கோவை ஆவாரம்பாளையம் எம்.ஜி. ரோட்டில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதி யடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து காயத்துடன் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விபத்தை ஏற்படுத்தி வரும் இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
  பரமசிவம், ஆவாரம்பாளையம்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

  கோவை ராமநாதபுரம் சவுரிபாளயைம் பிரிவு கிருஷ்ணசாமி நகர் பகுதியில் சாலையோரத்தில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப் பட்டு உள்ளன. ஆனால் அவை முறையாக சுத்தம் செய்யப் படுவது இல்லை. இதனால் அவை குவிந்து கிடக்கிறது. அந்தப்பகுதியில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அவை அந்த குப்பைகளை சாலையில் கொண்டு வந்து போட்டுவிடுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
  கனகராஜ், ராமநாதபுரம்.

தெருநாய்கள் தொல்லை

  கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் 3 கம்பம் வரை தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. 25-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சாலையில் கூட்டமாக சுற்றியபடி அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி கடிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுந்து படுகாயத்துடன் செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.
  ஐ.எஸ்.மணி, ஆர்.எஸ்.புரம்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

  கோவை தடாகம் ரோடு இடையர்பாளையம் ராமலட்சுமி நகர் 2-வது வீதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இவை முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை. சுத்தம் செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேல் ஆவதால் அங்கு கழிவுநீர் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேங்கி நிற்கும் கழிவுநீர் சீராக செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
  ஜெகநாதன், இடையர்பாளையம்.

அடிக்கடி விபத்து

  பொள்ளாச்சி தேர்முட்டி பகுதியில் ரவுண்டானா அமைக்கப் பட்டு உள்ளது. இதன் அருகே உள்ள சத்திரம் வீதி ஒருவழிப் பாதை ஆகும். ஆனால் இந்த வழியாக வருபவர்கள் ஒருவழிப் பாதையில் விதியை மீறி உடுமலை ரோட்டுக்கு செல்கிறார்கள். இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரி கள் உடனடி நடவடிக்கை எடுத்து விதியை மீறி ஒருவழிப்பாதை யில் செல்பவர்களை தடுக்க வேண்டும்.
  மகேஷ்குமார், பொள்ளாச்சி.

பொதுமக்கள் அவதி

  பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட நியூஸ்கீம் ரோடு, பாலகோபாலபுரம் வீதி உள்ளிட்ட பகுதியில் வணிக நிறுவனங் கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள சாக்கடை கால்வாயை தூர்வாரி மண்ணை சாலையோரத்தில் குவித்து வைத்து உள்ளனர். ஒரு வாரத்திற்கு மேலாகியும் மண்ணை அகற்றாததால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த மண்ணை அகற்ற வேண்டும்.
  செந்தில், பொள்ளாச்சி.

காந்தி சிலை வேண்டும்

  பொள்ளாச்சி நகரின் மைய பகுதியில் கோவை ரோட்டில் காந்தி சிலை வைக்கப்பட்டு இருந்தது. சாலை விரிவாக்க பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன் காந்தி சிலை அகற்றப்பட்டது. இதற்கிடையில் சாலை பணிகள் மற்றும் ரவுண்டான அமைக்கும் பணிகள் தாமதமாகி வருகிறது. இதனால் காந்தி சிலை மீண்டும் அதே இடத்தில் அமைக்கும் பணியும் தாமதமாகிறது. எனவே அதிகாரிகள் சாலை பணிகளை விரைந்து முடிந்து காந்தி சிலையை மீண்டும் அதே இடத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  கிருஷ்ணன், சின்னாம்பாளையம்.

பராமரிப்பு இல்லாத கழிவறை

  பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டு உள்ளது. இங்கு ஏராளமான கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இங்குள்ள கழிவறை முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. இதனால் அதிகளவில் துர்நாற்றம் வீசுவதால் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த கழிவறையை முறையாக சுத்தம் செய்வதுடன், அதை பயன்படுத்துபவர்களையும் சுத்தமாக வைத்திருக்க அறிவுரை வழங்க வேண்டும்.
  ஜாண்சன், பொள்ளாச்சி.


Next Story