தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி
தைப்பூசத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
தைப்பூசம்
பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கு பால், மஞ்சல், தயிர், இளநீர் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் காட்சி அளித்தார். கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் சுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ராஜ அலங்காரம்
பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதி லிங்கேஸ்வரர் கோவிலில் தைப்பூச நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் இதேபோன்று பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
செஞ்சேரிமலை
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலையில் உள்ள மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் நேற்று காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து உலக நலன் வேண்டி சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட வில்லை. இதனால் அவர்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
பொன்மலை
கிணத்துக்கடவில் கோவை -பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடக்க வில்லை.
பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் மலைக்கு செல்லும் வழியில் உள்ள நுழைவுவாசல் அடைக்கப் பட்டு இருந்தது. எனவே அங்கு வந்த பக்தர்கள் கோவில் முன்பு நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினார்கள்.
வால்பாறை
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திரு நாளான நேற்று காலையில் கணபதிஹோமம் மற்றும் அலங்கார பூஜைகள் தீபாராதனை ஆகியவை நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து முருகப்பெருமானுக்கும் வள்ளி- தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கோவில் நிர்வாகிகள் மட்டும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






