வளர்ப்பு யானையை மரக்கூண்டில் அடைத்து பயிற்சி அளிக்க திட்டம்

பாகனை தாக்கி கொன்ற வளர்ப்பு யானையை மரக்கூண்டில் அடைத்து பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
பாகனை தாக்கி கொன்ற வளர்ப்பு யானையை மரக்கூண்டில் அடைத்து பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகனை தாக்கி கொன்றது
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் அசோக் என்கிற யானை அட்டகாசம் செய்தது. இதையடுத்து டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அந்த யானை ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் அருகே உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டது.
12 வயதான அந்த யானையை பாகன் ஆறுமுகம் மற்றும் முருகன் ஆகியோர் பராமரித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி மேய்ச்சலுக்கு அழைத்து சென்றபோது பாகன் ஆறுமுகத்தை அசோக் யானை தாக்கி கொன்றது. இதையடுத்து அந்த யானையை தனியாக கட்டி வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
உணவின் அளவு குறைப்பு
பாகனை கொன்ற யானைக்கு தற்போது பால் மஸ்து (மதம்) பிடித்து உள்ளதாக தெரிகிறது. கால்நடை டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் அதற்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக உணவுடன் கொள்ளு சேர்த்து கொடுக்கப்படும். மதம் பிடித்து உள்ளதால் கொள்ளு கொடுப்பதில்லை.
மேலும் உணவின் அளவும் குறைக்கப்பட்டு உள்ளது. இந்த யானைக்கு மதம் குறைந்ததும் வரகளியாறு முகாமிற்கு அழைத்து செல்லப்படும். அதன்பிறகு அங்கு உள்ள மரக்கூண்டில் ஒரு மாதம் அடைத்து வைத்து யானைக்கு பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story






