தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 18 Jan 2022 10:22 PM IST (Updated: 18 Jan 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பி உள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பி உள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் விவரம் வருமாறு:-

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்

  கூடலூர் அக்ரஹார தெருவுக்குள் செல்லும் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் பொதுமக்கள் குழந்தைகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அதுபோன்று கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் சாலையோரம் நடைபாதையின் அடியில் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  சதீஷ், கூடலூர்.

சுற்றுச்சுவர் வேண்டும்

  ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் மருத்துவமனை சுற்றுச்சுவர் தடுப்புச்சுவருடன் இடிந்து விழுந்தது. புறநோயாளிகள் செல்லும் பகுதி அந்தரத்தில் தொங்குகிறது. இதுவரை தடுப்புச்சுவர் கட்டி சுற்றுச்சுவர் அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் நோயாளிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  சாந்தி, பிங்கர்போஸ்ட், ஊட்டி.

போக்குவரத்து நெரிசல்

  ஊட்டி ஏ.டி.சி.யில் குதிரைப்பந்தய மைதான வாகன நிறுத்து மிடத்தில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆங்காங்கே சாலையோரங்களில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்பட்டு வருகின்றன. அதன் காரணமாக எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே, வாகனங்களை நிறுத்த இடவசதி ஏற்படுத்த வேண்டும்.
  கவுதம், கோடப்பமந்து.

நிழற்குடை இல்லை

  கோத்தகிரி கட்டபெட்டு பஜார் பகுதி போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நெரிசல் மிகுந்த முக்கிய சந்திப்பு ஆகும். இங்கு பயணிகள் நிழற்குடை இல்லாததால், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் ஒதுங்க இடம் இல்லாமல் கடைகள் முன்பு காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் அவர்கள் மழை மற்றும் வெயில் நேரத்தில் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அங்கு உடனடியாக நிழற்குடை அமைக்க வேண்டும்.
  கிருஷ்ணன், கட்டபெட்டு.

காற்றில் பறக்கும் குப்பைகள்

  கோவை சித்தாபுதூர் புதியவர் நகரில் குப்பை தொட்டி இல்லாத தால் சாலையோரம் குப்பைகள் அதிகளவில் கொட்டப்பட்டு உள்ளன. மேலும் அந்த குப்பைகள் சுத்தம் செய்யப்படாததால் குவிந்து கிடக்கிறது. இதனால் காற்று வீசும்போது பிளாஸ்டிக் குப்பைகள் காற்றில் பறந்து அங்குள்ள வீடுகளுக்குள் வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதுடன், அங்கு குப்பை தொட்டி வைக்க வேண்டும்.
  ரவி, கோவை.

உடைந்த தபால் பெட்டி 

  கோவை ரத்தினபுரி பாலம் அருகே, சாஸ்திரி ரோடு பகுதியில் உள்ள தபால் பெட்டி உடைந்து நொறுங்கிய நிலையில் உள்ளது. இந்த பெட்டியில் போடும் தபால்கள் கீழே விழுந்துவிடுகிறது. தபால்கள் பட்டுவாடா ஆகுமா? என்ற சந்தேகம் பொது மக்களுக்கு உள்ளது. உடைந்த தபால் பெட்டியை மாற்றி புது தபால் பெட்டி வைக்க வேண்டும்.
  ராஜாபாய், ரத்தினபுரி.

பராமரிப்பு இல்லாத பூங்கா

  கோவை மாநகராட்சி 43-வது வார்டுக்கு உட்பட்ட ஆர்.கே லே-அவுட் வசந்தம் நகர், ராமசாமி லே-அவுட் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி பூங்காக்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. தற்போது இந்த பூங்காக்கள் போதிய பராமரிப்பு இன்றி புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிறுவர்கள் இந்த பூங்காக்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இந்த பூங்காக்கள் முறையாக பராமரிக்க வேண்டும்
  கதிர்வேல், ஆர்.எஸ்.புரம்.

வேகத்தடை இல்லாததால் விபத்து

  கோவை கருமத்தம்பட்டி பஸ்நிலையம் அருகே பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகேதான் பஸ்கள் செல்கின்றன. ஆனால் அவைகள் அனைத்தும் வேகமாக செல்வதால் பள்ளி முடிந்து வெளியே வரும்போது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பள்ளி முன்பு வேகத்தடை அமைத்தால் வாகனங்கள் மெதுவாக செல்லும். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  சந்தோஷ்குமார், எலச்சிபாளையம்.

குண்டும் குழியுமான சாலை

  கோவை காந்தி பார்க்கில் இருந்து செல்வபுரம் செல்லும் முத்தண்ணன் குளக்கரை சாலை குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு படுமோசமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
  நாகேந்திரகுமார், தீத்திபாளையம்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

  கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள நேதாஜி நகரில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. 15 நாட்களுக்கு ஒருமுறைதான் குப்பைகள் சுத்தம் செய்யப்படுவதால், குப்பைகள் குவிந்து அதிகளவில் துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. குவிந்து கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  ராஜசேகரன், நேதாஜி நகர்.
  

1 More update

Next Story