வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் அட்டகட்டி சோதனைச்சாவடி அருகே காட்டு யானை உலா வந்தது.

வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் அட்டகட்டி சோதனைச்சாவடி அருகே காட்டு யானை உலா வந்தது.
வால்பாறை
வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் அட்டகட்டி சோதனைச்சாவடி அருகே காட்டு யானை உலா வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
எஸ்டேட் பகுதியில் முகாம்
வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு வருகின்றன. இந்த யானைகள் திடீரென குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் பன்னிமேடு எஸ்டேட் பங்களா டிவிசன் பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் அங்குள்ள மாரியம்மன் கோவிலின் சுற்று சுவரை உடைத்து சேதப்படுத்தின. காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் எஸ்டேட் பகுதி மக்கள் பீதியடைந்து உள்ளனர்.
சாலையில் உலா வந்த காட்டு யானை
பொதுவாக வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் ஆழியாறு வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்து குரங்கு நீர்வீழ்ச்சி வரை யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் அட்டகட்டி வனத்துறை சோதனைச்சாவடி அருகே காட்டு யானை ஒன்று உலா வந்தது. அந்த ஆண் யானை நெடுஞ்சாலையில் உள்ள அறிவிப்பு பலகையை தந்தத்தால் குத்தி சேதப்படுத்திவிட்டு, அங்கிருந்து அட்டகட்டியில் நெடுஞ்சாலை துறையினருக்கு சொந்தமான ஆய்வு மாளிகை வளாகத்திற்குள் சென்றது.
இதுகுறித்து தகவல் அறிந்து வனச்சரகர் மணிகண்டன் உத்தரவின்பேரில், வனவர்கள் மாரிமுத்து, மணிகண்டன் தலைமையில் வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் அந்த பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை
அட்டகட்டி பகுதியில் காட்டு யானை உலா வந்த காட்சி சோதனைச்சாவடியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் தற்போது காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும். இரவு நேரத்தில் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும்.
மலைப்பாதையில் காட்டு யானைகளை கண்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story






