கடைகள் அடைப்பு போக்குவரத்து இல்லாததால் வெறிச்சோடிய சாலைகள்

தஞ்சை மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன. போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு
கொரோனா தொற்று 3-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழகஅரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நடவடிக்கையை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழகஅரசு அறிவித்தது. அதன்படி கடந்த 9-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்தவாரம் 16-ந் தேதி 2-வது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நேற்று 3-வது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
கடைகள் அடைப்பு
அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஓட்டல்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டது. ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், காய்கறி-மளிகை, இறைச்சி கடைகள், டாஸ்மாக் கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் போன்றவை மூடப்பட்டு இருந்தன.
மேலும் டீக்கடைகள், சுவீட் கடைகள், செல்போன் கடைகள், பழக்கடைகள் என சுமார் 45 ஆயிரம் கடைகள் மாவட்டம் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கம், சுற்றுலா தலங்களான அரண்மனை, கலைக்கூடம், கல்லணை, மனோரா உள்ளிட்ட இடங்களும் மூடப்பட்டிருந்தன. ஆனால் வழக்கம்போல் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் எல்லாம் திறந்து இருந்தன.
ரெயிலில் பயணம்
தஞ்சை புதுக்கோட்டை சாலை காவேரி நகரில் உள்ள தற்காலிக காமராஜர் மார்க்கெட், தஞ்சை பூக்காரத்தெரு பூச்சந்தை, கீழவாசல் மீன்மார்க்கெட் ஆகியவை அடைக்கப்பட்டிருந்தன. தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள உழவர் சந்தையும் அடைக்கப்பட்டிருந்தது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்கள் திறந்து இருந்தன.
கடைகள் அடைக்கப்பட்டு இருந்தாலும் பொதுமக்கள் தேவையான காய்கறிகள், இறைச்சி, மீன்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முதல்நாளே வாங்கி வைத்து கொண்டனர். வெளியூரில் இருந்து ரெயில்கள் மூலம் வந்த பயணிகளின் வசதிக்காக ரெயில் நிலைய பகுதியில் ஆட்டோக்கள், வாடகை கார்கள் நிபந்தனைகளுடன் இயக்க போலீசார் அனுமதி அளித்தனர்.
வெறிச்சோடிய சாலைகள்
முழு ஊரடங்கு காரணமாக தஞ்சை மாநகரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் காந்திஜிசாலை, புதுக்கோட்டை சாலை, தெற்குவீதி, கீழவீதி, வடக்குவீதி, தெற்குஅலங்கம், கீழவாசல், நாகை சாலை, வல்லம் நம்பர்-1 சாலை, மருத்துவக்கல்லூரி சாலை உள்ளிட்ட சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
ஊரடங்கை மீறி உரிய காரணங்கள் இன்றி சிலர் இருசக்கர வாகனங்களில் வந்தனர். அவர்களை போலீசார் அழைத்து எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட எல்லைகளில் 8 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வந்தனர்.
பால் விற்பனை
அத்தியாவசிய பொருட்களான பால் விற்பனை கடைகள், மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. பொது போக்குவரத்து முடக்கப்பட்டதால் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. புறநகர் பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் எல்லாம் கரந்தை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
டவுன் பஸ்கள் எல்லாம் ஜெபமாலைபுரத்தில் உள்ள அரசு பணிமனையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. தஞ்சை வழியாக சென்ற விரைவு ரெயில்கள் வழக்கம்போல் இயங்கின. இருந்தாலும் குறைந்த அளவிலேயே மக்கள் பயணம் மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story