சிறுமியை திருமணம் செய்து தாயாக்கிய வாலிபர் போக்சோவில் கைது


சிறுமியை திருமணம் செய்து தாயாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
x
தினத்தந்தி 23 Jan 2022 8:52 PM GMT (Updated: 23 Jan 2022 8:52 PM GMT)

சிறுமியை திருமணம் செய்து தாயாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

ஜெயங்கொண்டம்:

பலாத்காரம்
அரியலூர் மாவட்டம் முத்துவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த ராமசாமியின் மகன் அடைக்கலராஜ்(வயது 32). இவர் ஒரு கிராமத்தில் கூலி வேலைக்காக சென்றபோது, 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியதாக தெரிகிறது. மேலும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அடைக்கலராஜ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தனது தாயிடம் சிறுமி கூறியதையடுத்து உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடைக்கலராஜுக்கும், சிறுமிக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
பிரசவத்திற்காக அனுமதி
இந்நிலையில் கா்ப்பமாக இருந்த சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து பிரசவத்திற்காக கடந்த ஜனவரி மாதம் 19-ந் தேதி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிறுமியிடம் விவரம் கேட்டபோது அவருக்கு 15 வயதே ஆவது தெரியவந்தது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் குழந்தைகள் பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் குழந்தைகள் பாதுகாப்பு துறை அலுவலர் கார்த்திகேயன் சிறுமியிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து குழந்தை திருமணம் செய்ததாக அடைக்கலராஜ் மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த அடைக்கலராஜின் தந்தை ராமசாமி மற்றும் சிறுமியின் தாய் ஆகியோர் மீது ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போக்சோவில் கைது
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடைக்கலராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான ராமசாமி, சிறுமியின் தாய் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே மருத்துவமனையில் அந்த சிறுமிக்கு பிரசவத்தின்போது ஆண் குழந்தை இறந்தே பிறந்ததாக கூறப்படுகிறது.

Next Story