பழைய இரும்பு கடை தீப்பற்றி எரிந்தது


பழைய இரும்பு கடை தீப்பற்றி எரிந்தது
x
தினத்தந்தி 23 Jan 2022 8:54 PM GMT (Updated: 23 Jan 2022 8:54 PM GMT)

பழைய இரும்பு கடை தீப்பற்றி எரிந்து நாசமானது.

அரியலூர்:
அரியலூர் கைலாசநாதர் கோவில் தெருவில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருபவர் கார்த்திக். இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று அதிகாலை 2 மணியளவில் அவருடைய கடையில் இருந்து புகை வெளியேறியது. இதைக்கண்ட பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் கார்த்திக்கு தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்து கடையின் கதவை திறந்தபோது கடையின் உள்ளே பழைய இரும்பு பொருட்கள், காகிதங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்த அரியலூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காலை 8 மணி வரை முயன்றபோதும், கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க முடியவில்லை. பின்னர் கடையின் நான்குபக்கமும் அடைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகளை உடைத்து பொருட்களை வெளியே எடுத்தும் தீ எரிந்து கொண்டிருந்தது. 24 மணி நேரம் எரிந்து கொண்டிருந்த தீயை, பொக்லைன் எந்திரம் மூலம் பொருட்கள் அனைத்தையும் வெளியே எடுத்து சிறிது சிறிதாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பழைய பொருட்கள் எரிந்து நாசமானது. அருகில் உள்ள அனைத்து வீடுகளும் கான்கிரீட் கட்டிடங்கள் என்பதால் தீ பரவவில்லை. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்த பகுதி புகை மண்டலமாக இருந்தது. இது குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story