அழுக்கு உடை அணிந்து சரக்கு வாகனம் வாங்க சென்றதால் கேலி செய்தனர் - ‘நட்புக்காக’ சினிமா பாணியில் ஷோரூம் ஊழியர்களை மிரள வைத்த விவசாயி


அழுக்கு உடை அணிந்து சரக்கு வாகனம் வாங்க சென்றதால் கேலி செய்தனர் - ‘நட்புக்காக’ சினிமா பாணியில் ஷோரூம் ஊழியர்களை மிரள வைத்த விவசாயி
x
தினத்தந்தி 23 Jan 2022 9:11 PM GMT (Updated: 23 Jan 2022 9:11 PM GMT)

அழுக்கு உடை அணிந்து சரக்கு வாகனம் வாங்க சென்றதால் கேலி ெசய்த ஷோரூம் ஊழியர்களை ‘நட்புக்காக’ சினிமா பாணியில் விவசாயி ஒருவர் மிரள வைத்த ருசிகர சம்பவம் துமகூருவில் நடந்துள்ளது

துமகூரு:

கேலி செய்த ஷோரூம் ஊழியர்கள்

  தமிழில் நட்புக்காக என்ற படத்தில் விஜயகுமார் கார் வாங்க ஷோரூமுக்கு செல்வார். அப்போது அவரின் பேச்சு, உடை பாவனையை பார்த்து ஷோரூம் ஊழியர்கள் கிண்டல் செய்வார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சாக்கு மூட்டையில் கொண்டு வந்த பணத்தை கொட்டி விஜயகுமார் அதிர்ச்சி கொடுப்பார். இதுபோன்ற ஒரு சம்பவம் கர்நாடகத்திலும் அரங்கேறி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

  துமகூரு மாவட்டம் ராமனபாளையா கிராமத்தை சேர்ந்தவர் கெம்பேகவுடா. விவசாயி. இந்த நிலையில் நேற்று முன்தினம் துமகூரு டவுனில் உள்ள கார் ஷோரூமுக்கு கெம்பேகவுடா சென்று இருந்தார். அப்போது அவர் அழுக்கு உடை அணிந்து சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் கெம்பேகவுடாவிடம் ஷோரூம் ஊழியர்கள் இங்கு எதற்காக வந்தீர்கள் என்று கேட்டு உள்ளனர். அப்போது விவசாய பொருட்களை எடுத்து செல்லும் வகையில் ஒரு சரக்கு வாகனம் வாங்க வந்து உள்ளேன் என்று கெம்பேகவுடா கூறியுள்ளார். இதனால் சிரித்த ஷோரூம் ஊழியர்கள், ‘உங்களிடம் 10 ரூபாய் உள்ளதா? சரக்கு வாகனம் வாங்க வந்திருப்பதாக கூறி காமெடி செய்கிறீர்களா? ’ என்று கேட்டு கேலி செய்து உள்ளனர்.

விவசாயி போராட்டம்

  அப்போது கெம்பேகவுடா, ‘நான் நிஜமாக சரக்கு வாகனம் வாங்க தான் வந்து உள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

  அப்போது ஷோரூம் ஊழியர்கள், ‘உங்களுக்கு அரை மணி நேரம் தருகிறோம். அதற்குள் ரூ.10 லட்சத்தை கொடுத்துவிட்டு சரக்கு வாகனத்தை வாங்கி செல்லுங்கள்’ என்று கூறி சவால் விடுத்து உள்ளனர்.

  இந்த சவாலை ஏற்றுக்கொண்ட கெம்பேகவுடா கிராமத்தில் வசித்து வரும் தனது மாமாவான ராம ஆஞ்சநேயாவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உடனடியாக ரூ.10 லட்சத்தை எடுத்து கொண்டு ஷோரூமுக்கு வரும்படி கூறியுள்ளார்.

  அதன்படி ராம ஆஞ்சநேயாவும் ரூ.10 லட்சத்தை எடுத்து கொண்டு ஷோரூமுக்கு சென்றார். பின்னர் அந்த பணத்தை ஷோரூம் ஊழியர்களிடம் கெம்பேகவுடா கொடுத்தார். இதனால் ஒரு கணம் ஷோரூம் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் கெம்பேகவுடா, ‘ நீங்கள் கூறியபடி அரை மணி நேரத்தில் ரூ.10 லட்சம் கொடுத்து விட்டேன் எனக்கு சரக்கு வாகனத்தை டெலிவிரி செய்யுங்கள்’ என்று கேட்டு உள்ளார். அப்போது பல்வேறு காரணங்களை கூறிய ஷோரூம் ஊழியர்கள் 2 நாட்கள் கழித்து சரக்கு வாகனத்தை டெலிவிரி தருவதாக கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்த கெம்பேகவுடா, ஷோரூம் முன்பு போராட்டம் நடத்தினார்.

மன்னிப்பு கேட்டனர்

  இதுபற்றி அறிந்ததும் திலக்பார்க் போலீசார் அங்கு சென்று கெம்பேகவுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தன்னிடம் அலட்சியமாக பேசிய ஷோரூம் ஊழியர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் தங்களது தவறை உணர்ந்த ஷோரூம் ஊழியர்கள், கெம்பேகவுடாவிடம் மன்னிப்பு கேட்டனர். இதனை ஏற்றுக்கொண்ட கெம்பேகவுடா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Next Story