‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 23 Jan 2022 9:23 PM GMT (Updated: 23 Jan 2022 9:23 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலை சீரமைக்கப்பட்டது

சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சி 2-வது வார்டு பச்சா ரோடு சரவணாநகரில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த பாதையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்தனர். அந்த பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி'க்கும் பாராட்டு தெரிவித்து கொள்கிறோம்.

-ஊர்மக்கள், கன்னங்குறிச்சி, சேலம்.
===
சுகாதார சீர்கேடு

சேலம் மாவட்டம் மேட்டூர்-கொளத்தூர் சாலை மாசிலாபாளையம் பகுதியில் மின்கம்பம் அருகே குப்பைகளை கொட்டி சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். குப்பைகளை எரிக்காமல் எடுத்துச் செல்ல சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? 
-ஊர்மக்கள், மாசிலாபாளையம், சேலம்.
==
ஜல்லிகள் பெயர்ந்த சாலை

நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம் ஒன்றியம் கொன்னையார் கிராமம் நல்லாம்பாளையம் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து அணைப்பாளையம் வரை 2 ஆண்டுகளுக்கு முன்பாக தார்சாலை போடுவதாக கூறி இன்னும் போடவில்லை. இதனால் இந்த சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது. இந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து அடிபடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை புதிதாக அமைக்க வேண்டும்.
-ஊர்பொதுமக்கள், நல்லாம்பாளையம், நாமக்கல்.
===
சீரமைக்கப்படாத சாலை

தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி விடிவெள்ளி நகர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் அரசு பெண்கள் பள்ளி செல்லும் சாலை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த மழையால் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி விரைவில் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க முன் வருவார்களா?
-ஊர்மக்கள், விடிவெள்ளிநகர், தர்மபுரி.
===
பன்றிகள் தொல்லை

கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தும் பன்றிகளை பிடித்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-சரவணன், கிருஷ்ணகிரி.
==
பயன்படாத நடைபயிற்சி பாதை

சேலம் அரிசிப்பாளையம் ராஜேந்திரா சத்திரம் பின்புறம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நடைபயிற்சி பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதுவரை அந்த பாதை திறக்கப்படாமல் பயன்பாடின்றி காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நடைபயிற்சி பாதையை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-சதீஷ்குமார், அரிசிப்பாளையம், சேலம்.
===
வேகத்தடை வேண்டும்

சேலம் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அருகில் உள்ள சாலையை பொதுமக்கள் கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே இந்த பகுதியில் உள்ள அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஊர்மக்கள், குமாரசாமிப்பட்டி, சேலம்.
===
நோய் பரவும் அபாயம்

சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சி 6-வது வார்டில் மாதக்கணக்கில் குப்பைகள்  அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்கிறார்கள். துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

-ஊர்பொதுமக்கள், கன்னங்குறிச்சி, சேலம்.

சேலம் கொண்டலாம்பட்டி மேட்டுத்தெரு ஏரிக்கு செல்லும் சாலையில்  போக்குவரத்துக்கு இடையூறாக அந்த பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளதால் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அள்ளி சுத்தம் செய்வார்களா?

-வேல்முருகன், கொண்டலாம்பட்டி, சேலம்.
===
நடவடிக்கை எடுப்பார்களா?

சேலம் அம்மாபேட்டை 40-வது வார்டு வித்யா நகரில் சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்டது. சாக்கடையில் இருந்து அள்ளப்பட்ட மண், பல நாட்கள் ஆகியும் இதுவரை  அகற்றப்படவில்லை. இ்ந்த பகுதியில் பள்ளிக்கூடம் அமைந்துள்ளதால் மாணவர்களுக்கு நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. இது பற்றி புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரத்தனகிரி, வித்யாநகர், சேலம்.
===

Next Story