நண்பர் வீட்டில் 21 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருடிய வாலிபர் கைது


நண்பர் வீட்டில் 21 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2022 12:22 AM GMT (Updated: 24 Jan 2022 12:22 AM GMT)

சென்னையில் நண்பரின் வீட்டில் 21 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை திருவல்லிக்கேணி, வெங்கடாச்சலம் 3-வது தெருவில் வசிப்பவர் சாரதி (வயது 28). இவரது வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பீரோவில் வைத்திருந்த 21 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் மாயமான முறையில் திருட்டு போய்விட்டது.

பீரோ உடைக்கப்படவில்லை. சாரதியும் வீட்டை பூட்டிவிட்டு வெளியூரும் போகவில்லை. இந்த நிலையில் பீரோவில் இருந்த நகைகளும், பணமும் எப்படி? திருட்டு போனது என்பது மர்மமாக இருந்தது.

இது குறித்து, ஐஸ்-அவுஸ் போலீஸ் நிலையத்தில் சாரதி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

நண்பர் கைது

விசாரணையில் தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியைச்சேர்ந்த சுமன் என்ற நண்பர் ஒருவர் சாரதியின் வீட்டுக்கு வந்து சென்றதும், அவர்தான், நைசாக சாரதி வீட்டில் திறந்து கிடந்த பீரோவில் இருந்து 21 பவுன் தங்க நகைகளையும், ரூ.2 லட்சத்தையும் திருடிச்சென்றது தெரிய வந்தது.

ஐஸ்-அவுஸ் குற்றப்பிரிவு போலீசார், சுமனை கைது செய்தனர். அவரிடம் இருந்து நகை மற்றும் பணம் மீட்கப்பட்டது. அவர் சொந்தமாக சலூன் கடை நடத்தி வந்தது தெரிய வந்தது.

Next Story