எக்ஸ்பிரஸ் ரெயில் வந்ததால் தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு உயிர் தப்பிய வாலிபர்


எக்ஸ்பிரஸ் ரெயில் வந்ததால் தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு உயிர் தப்பிய வாலிபர்
x
தினத்தந்தி 24 Jan 2022 11:30 AM GMT (Updated: 24 Jan 2022 2:44 PM GMT)

எக்ஸ்பிரஸ் ரெயில் வந்ததால் தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு வாலிபர் உயிர் தப்பினார். மோட்டார் சைக்கிள் 3 கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு சுக்கு நூறானது.

தப்பி ஓட்டம்

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு ஆலப்புழாவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் திரளான பயணிகள் இருந்தனர். அந்த ரெயில் திருநின்றவூரை அடுத்த செவ்வாப்பேட்டை ரெயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்தது.

ரெயில் வருவதை கவனிக்காத மோட்டார் சைக்கிளில் வந்த நபர், ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். இதை கவனித்த ரெயில் இன்ஜின் டிரைவர் உடனடியாக ஆரன் அடித்து எச்சரித்தார். ரெயில் அருகே வந்ததால் தனது மோட்டார் சைக்கிளை தண்டவாளத்தில் போட்டு விட்டு ஓடி உயிர் தப்பினார்.

2 மணி நேரம் தாமதம்

இந்த நிலையில் ரெயிலுக்கு அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிள் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டது. இதையடுத்து அந்த ரெயில் புட்லூர் ரெயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. பின்னர் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு ரெயிலுக்கு அடியில் சுக்குநூறாக உடைந்து இருந்த மோட்டார் சைக்கிள் வெளியே எடுக்கப்பட்டது. இதன் காரணமாக ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேர தாமதத்துக்கு பின்னர் புட்லூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் ரெயில் பயணிகள் காயமின்றி தப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story