காஞ்சீபுரம் அருகே ரூ.24 லட்சம் குட்கா சிக்கியது


காஞ்சீபுரம் அருகே ரூ.24 லட்சம் குட்கா சிக்கியது
x
தினத்தந்தி 24 Jan 2022 12:30 PM GMT (Updated: 24 Jan 2022 12:30 PM GMT)

காஞ்சீபுரம் அருகே ரூ.24 லட்சம் மதிப்புடைய குட்கா, வாகனங்களை சோதனை செய்தபோது சிக்கியது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப்பொருள்கள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ஜீலியஸ் சீசர் அறிவுரையின் பேரில், மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ள தாமரைத்தாங்கல் என்ற பகுதியில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சப் -இன்ஸ்பெக்டர்கள் ராஜமாணிக்கம், கிருஷ்ணமூர்த்தி மற்றும் குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி அவர்கள் தாமரைத்தாங்கல் பகுதியில் இருந்த குடோன் மற்றும் வாகனங்களை சோதனை செய்தபோது ரூ.24 லட்சத்து 31 ஆயிரம் மதிப்புடைய குட்கா பொருட்கள், ரூ.5 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பிலான மின்சாதன பொருட்கள், மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2- கனரக லாரிகள், மினி லாரி மற்றும் இருசக்கர வாகனம் போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.

இதுதொடர்பாக சென்னை வியாசர்பாடி, கல்யாணிபுரம் முதல்தெருவை சேர்ந்த பழனிவேல் (வயது 33), காஞ்சீபுரம் தானப்பன் தெருவை சேர்ந்த சசிகுமார் (40) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story