கொரோனா பரவலுக்கு மத்தியில் மராட்டியத்தில் பள்ளிகள் திறப்பு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 24 Jan 2022 2:28 PM GMT (Updated: 24 Jan 2022 2:28 PM GMT)

கொரோனா பரவலுக்கு மத்தியில் மராட்டியத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. பல இடங்களில் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

மும்பை, 

கொரோனா பரவலுக்கு மத்தியில் மராட்டியத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. பல இடங்களில் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். 

 பள்ளிகள் மூடலுக்கு எதிர்ப்பு

மராட்டியத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. நோய் தொற்றின் 2-வது அலை கட்டுக்குள் வந்ததை அடுத்து கடந்த நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. குறிப்பாக தலைநகர் மும்பையில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் மாதம் 15-ந் தேதி தொடக்க பள்ளிகள் கூட திறக்கப்பட்டன. 

ஒமைக்ரான் அச்சுறுத்தல், கொரோனா பரவல் காரணமாக இந்த மாதம் முதல் வாரத்தில் மாநிலம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. திறக்கப்பட்ட சில நாட்களிலேயே பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டது. 

பள்ளிகள் மூடப்பட்டதற்கு பெரும்பாலான கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல மும்பையிலும் ஒமைக்ரான் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மேலும் கொரோனா 3-வது அலை ஏறிய வேகத்தில் இறங்கியது. ஆனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவி வருகிறது. 
முதல்-மந்திரி ஒப்புதல்
 இருப்பினும் மாநிலம் முழுவதும் பள்ளிகளை திறக்க பள்ளிகல்வித்துறை அரசுக்கு பரிந்துரை செய்தது. இதை ஏற்றுக்கொண்ட முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மாநிலம் முழுவதும் 1-ம் வகுப்பு முதல் அனைத்து பள்ளிகளை திறக்க அதிரடியாக ஒப்புதல் அளித்தார்.
 மாநிலத்தின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறக்கும் இறுதி முடிவை அந்தந்த மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் எடுத்து கொள்ள அரசு உத்தரவிட்டு இருந்தது.

பள்ளிகள் திறப்பு

இதையடுத்து நேற்று மாநிலம் முழுவதும் கொரோனா அதிகம் பரவாத மற்றும் கொரோனா பரவல் ஏற்பட்டு சரிவை சந்தித்து வரும் பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டன. மும்பையில் நேற்று காலை கடுங்குளிரிலும் மாணவர்கள் சீருடை அணிந்து பள்ளிகளுக்கு உற்சாகமாக சென்றதை காண முடிந்தது. மாணவர்களை ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். மும்பையை பொறுத்தவரை மழலையர் பள்ளிகளையும் திறக்க மாநகராட்சி அனுமதி அளித்து இருந்தது. 

இதேபோல தானே உள்பட பல பகுதிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்து நேரடி வகுப்பில் கலந்து கொண்டனர். சில இடங்களில் மாணவர்கள் வருகை பதிவு குறைவாகவே இருந்தது. 

மந்திரி வாழ்த்து

பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் வாழ்த்து கூறினார். 

இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில், "பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். இந்த நாளில் நீங்கள் பாதுகாப்பான சூழலில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என நம்புகிறேன்" என கூறியுள்ளார்.
மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்ட வேளையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள புனே, அவுரங்காபாத் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
-----------------


Next Story