இரணியல் அருகே சொத்து தகராறில் தம்பியால் தாக்கப்பட்ட காண்டிராக்டர் சாவு


இரணியல் அருகே சொத்து தகராறில் தம்பியால் தாக்கப்பட்ட காண்டிராக்டர் சாவு
x
தினத்தந்தி 24 Jan 2022 5:36 PM GMT (Updated: 24 Jan 2022 5:36 PM GMT)

இரணியல் அருகே சொத்து தகராறில் தாக்கப்பட்ட காண்டிராக்டர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கொலை வழக்கின் கீழ் தம்பியை போலீசார் கைது செய்தனர்.

திங்கள்சந்தை, 
இரணியல் அருகே சொத்து தகராறில் தாக்கப்பட்ட காண்டிராக்டர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கொலை வழக்கின் கீழ் தம்பியை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கட்டிட காண்டிராக்டர்
இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு வர்த்தகநாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 41), கட்டிட காண்டிராக்டர். இவருக்கும் இவரது தம்பி கதிரவன் (39) என்பவருக்கும் இடையே குடும்ப சொத்தை பிரிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. 
இந்தநிலையில் கடந்த 22-ந் தேதி இரவு சிவகுமார் வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வர்த்தகநாடார் குடியிருப்பு பகுதியில் வந்த போது அங்கு வந்த கதிரவன், அவரை தடுத்து நிறுத்தி ‘குடும்ப சொத்தை பிரித்து தர மாட்டாயா?’ எனக்கேட்டு வாக்குவாதம் செய்தார். இதில் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. 
சரமாரியாக தாக்குதல்
அப்போது ஆத்திரம் அடைந்த கதிரவன் அருகில் கிடந்த இரும்பு குழாயை எடுத்து சிவகுமாரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் அவருக்கு தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். உடனே, கதிரவன் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதையடுத்து படுகாயங்களுடன் கிடந்த சிவகுமாரை பொதுமக்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 
பரிதாப சாவு
இதுகுறித்து சிவகுமாரின் மனைவி வனிதா இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கதிரவன் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். 
இந்தநிலையில் சிவகுமார் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் மருத்துவமனையில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கதிரவன் மீது பதிவு செய்யப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இறந்த சிவகுமாருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கைது செய்யப்பட்ட சிவகுமாருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. 
சொத்து தகராறில் காண்டிராக்டரை தம்பி அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Next Story