குமரியில் புதிதாக 1,152 பேருக்கு கொரோனா


குமரியில் புதிதாக 1,152 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 Jan 2022 5:42 PM GMT (Updated: 24 Jan 2022 5:42 PM GMT)

குமரி மாவட்டத்தில் புதிதாக 1,152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. வீட்டு தனிமையில் 5,300 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் புதிதாக 1,152 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. வீட்டு தனிமையில் 5,300 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனா பரவல்
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கு மேல் உள்ளது.
தற்போதைய கொரோனா 3-வது அலையில் மாவட்டத்தில் இதுவரை 10 டாக்டர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதே போல போலீஸ் தரப்பில் 90-க்கும் மேற்பட்ட போலீசார் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
1,152 பேர் பாதிப்பு
இந்தநிலையில் புதிதாக 1,152 பேருக்கு நோய் தொற்று உறுதியாகி உள்ளது. அதாவது குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மூலமாகவும், சோதனை சாவடிகள் மற்றும் களப்பணியாளர்கள் மூலமாகவும் மொத்தம் 3,544 பேருக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் 612 ஆண்கள் மற்றும் 540 பெண்கள் என மொத்தம் 1,152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக நாகர்கோவில் மாநகரில் மட்டும் 252 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதே போல வட்டார அளவில் அகஸ்தீஸ்வரம்-188, கிள்ளியூர்-63, குருந்தன்கோடு-81, மேல்புறம்-75, முன்சிறை-91, ராஜாக்கமங்கலம்-69, திருவட்டார்-120, தோவாளை-100, தக்கலை-90 மற்றும் கேரளாவில் இருந்து வந்த 9 பேருக்கும், திருநெல்வேலியில் இருந்து வந்த 7 பேருக்கும், தஞ்சாவூர், திண்டுக்கல், சென்னை, ஈரோடு, காஞ்சீபுரம், தூத்துக்குடி மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் இருந்து வந்த தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நோய் தொற்று அதிகம் உள்ளவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், தொற்று பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வீட்டு தனிமை
குமரி மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வந்தாலும், நோய் தொற்றின் வீரியம் சற்று குறைவாக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகளால் கூறப்படுகிறது. எனவே ஆஸ்பத்திரிகளை காட்டிலும் வீடுகளிலேயே அதிகப்படியான நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்த வகையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 51 பேரும், கவனிப்பு மையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 381 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வீட்டு தனிமையில் மட்டும் 5,392 பேர் சிகிச்சையில் உள்ளனர். வீட்டு தனிமையில் இருப்பவர்களை அந்தந்த பகுதி சுகாதாரத்துறையினர் தினமும் நேரில் சென்று கண்காணிக்கிறார்கள். அவர்களுக்கு தேவையான மாத்திரைகளும், மருந்துகளும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 

Next Story