முக கவசம் அணியாத 2,667 பேர் மீது வழக்கு; கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை

கரூர் மாவட்டத்தில் முக கவசம் அணியாத 2,667 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரூர்
தீவிர சோதனை
கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் அலை தற்போது நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்நோய் பரவுதலின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு உத்தரவின்படி கரூர் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு காலமான நேற்றுமுன்தினம் அரசு மதுபானக்கடை விடுமுறை நாளாகும். அன்று சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டி தீவிர சோதனை நடத்தியதில் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 360 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
60 வழக்குகள்
மேலும் தீவிர வாகன சோதனை செய்ததிலும், முக கவசம் அணியாமல் வெளியில் வந்த நபர்களின் மீதும் 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதத் தொகையாக ரூ.30 ஆயிரமும், பொது இடங்கள், கடைகள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தவர்கள் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதத்தொகையாக ரூ.1,000-ம் விதிக்கப்பட்டுள்ளது.
கடுமையான நடவடிக்கை
கொரோனா வைரஸ் நோயின் மூன்றாம் அலை கட்டுப்படுத்த வேண்டி அரசு அறிவித்த ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்கள் மீது கடந்த 8-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை முக கவசம் அணியாதவர்கள் மீது சுமார் 2 ஆயிரத்து 667 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதத் தொகையாக ரூ.13 லட்சத்து 33 ஆயிரத்து 500-ம், சமூக இடைவெளியை கடைபிடிக்காத நபர்கள் மீது 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதத் தொகையாக ரூ.15 ஆயிரத்து 500- ம், விதிமுறைகளை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றித்திரிந்தவர்கள் மீது சுமார் 17 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நோய்ப்பரவலை கட்டுப்படுத்த வேண்டி பொதுமக்கள் அவசியமின்றி வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். அரசு விதிமுறைகளை மீறி ஊரடங்கு காலங்களில் வெளியில் சுற்றித்திரியும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் எச்சரித்துள்ளார்.
Related Tags :
Next Story