சி எம் சி காலனியில் 40 வீடுகள் இடித்து அகற்றம்


சி எம் சி காலனியில் 40 வீடுகள் இடித்து அகற்றம்
x
தினத்தந்தி 24 Jan 2022 6:08 PM GMT (Updated: 24 Jan 2022 6:08 PM GMT)

கோவை உக்கடம் மேம்பாலம் கட்டும் பணிக்காக சி.எம்.சி. காலனி யில் 40 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. மேலும் காலியிடத்தில் பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

கோவை

கோவை உக்கடம் மேம்பாலம் கட்டும் பணிக்காக சி.எம்.சி. காலனி யில் 40 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. மேலும் காலியிடத்தில் பூங்கா அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

உக்கடம் மேம்பாலம் 

கோவை மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு அவினாசி ரோடு, திருச்சி ரோடு மற்றும் உக்கடத்தில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 

இதில் உக்கடம்-ஆத்துப் பாலம் மேம்பால பணி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த மேம்பாலம் ரூ.430 கோடியில் 2 கட்டங்களாக கட்டப்பட்டு வருகிறது.  உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் இருந்து உக்கடம் பெரியகுளம் வரையும், 2-ம் கட்டமாக உக்கடம் பெரியகுளம் முதல் ஆத்துப்பாலம் வரையும் நடக்கிறது. 

இதில் பொள்ளாச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதியில் இருந்து ஒப்பணக்கார வீதி செல்லும் வாகனங்களுக்காக உக்கடம் போலீஸ் நிலையம் அருகே இறங்குதளம் வட்ட வடிவில் அமைக்கப்படுகிறது. 

வீடுகள் இடிப்பு

இதற்காக சி.எம்.சி. காலனியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் சலவை தொழிலாளர்கள் வீடுகளை இடிக்க முடிவு செய்யப் பட்டது. இங்கு குடியிருந்தவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் புல்லுக்காடு பகுதியில் மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. 

இதையடுத்து காலி செய்யப்படும் ஆக்கிரமிப்பு வீடுகள் படிப்படியாக இடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி  சி.எம்.சி. காலனியில் மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் பாபு மற்றும் மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னிலையில் 40 வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. 

இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினர் கூறியதாவது:-
உக்கடம் மேம்பாலம் கட்டுமான பணிக்காக கரும்புக்கடை, சி.எம்.சி. காலனி உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 5 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட வேண்டும். இதில் 3 ஏக்கர் நிலம் வரை கையகப்படுத்தப் பட்டு விட்டது. 


சி.எம்.சி. காலனியில் மொத்தம் 721 குடும்பங்கள் உள்ளன. இதில் இதுவரை 304 குடும்பங்கள் காலி செய்யப்பட்டு விட்டது. மேலும் அங்குள்ள மீன் மார்க்கெட் அருகே 429 குடும்பங்களுக்கு வீட்டு வசதி வாரியம் சார்பில் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. 

தற்போது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் மேம்பாலத்தின் இறங்குதளம் வட்ட வடிவில் அமைக்கப்படும். 

அழகிய பூங்கா

இதுதவிர செல்வபுரம் செல்வதற்காக சர்வீஸ் சாலையும் அமைக்கப் படுகிறது. மீதியுள்ள காலியிடங்களில் பொதுமக்களை கவரும் வகையில் அழகிய பூங்கா அமைக்க திட்டமிட்டு உள்ளோம். 

உக்கடம் மேம்பால பணிக்காக மின்ஒயர்களை பூமிக்கடியில் பதிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story