முன்னாள் பேரூராட்சி தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை


முன்னாள் பேரூராட்சி தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 24 Jan 2022 6:12 PM GMT (Updated: 24 Jan 2022 6:12 PM GMT)

கோவை அருகே முன்னாள் பேரூராட்சி தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இடிகரை

கோவை அருகே முன்னாள் பேரூராட்சி தலைவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

முன்னாள் பேரூராட்சி தலைவர்

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த நெம்பர் 4 வீரபாண்டி பேரூராட்சியில் கடந்த 2001 முதல் 2016-ம் ஆண்டு வரை பேரூராட்சி தலைவராக இருந்தவர் கே.வி.என்.ஜெயராமன். ரியல் எஸ்டேட் அதிபர். இவர் அ.தி.மு.க. பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளராகவும் இருந்து வருகிறார்.

கடந்த 2011 ஆண்டு தேர்தல் வேட்புமனுவில் இவர் பெயரிலும், இவரது மனைவி பெயரிலும் ரூ.1.25 கோடி அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாக கணக்கு காண்பித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 2016-ம் தேர்தலில் அளித்த வேட்புமனுவில் ரூ.3.43 கோடிக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இருப்பதாக தாக்கல் செய்திருந்தார். 

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கே.வி.என்.ஜெயராமன் மற்றும் அவருடைய மனைவி மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1 கோடியே 45 லட்சத்து 75 ஆயிரம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இதையடுத்து நெம்பர் 4 வீரபாண்டி நாயக்கனூரில் உள்ள கே.வி.என். ஜெயராமன் வீட்டுக்கு  மதியம் 1 மணிக்கு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வந்தனர். பின்னர் அவர்கள் வீட்டில் சோதனை நடத்தினார்கள். 

அ.தி.மு.க.வினர் குவிந்தனர்

அப்போது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தனர். லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடைபெறுவதை அறிந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story