தினத்தந்தி புகார் பெட்டி


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 24 Jan 2022 6:36 PM GMT (Updated: 24 Jan 2022 6:36 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பச்சமலை கோரையாறு அருவிக்கு பாதை வசதி செய்யப்படுமா?
திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பச்சமலை வண்ணாடு பஞ்சாயத்தில் மினி குற்றாலம்  கோரையாறு அருவி உள்ளது. இந்த அருவிக்கு செல்ல ஒத்தையடி பாதை வழியாகத்தான் செல்ல முடியும். அந்தப் பாதையும் சறுக்கல் நிறைந்ததாகவும் கால் வைத்து நடந்தால் வழுக்கி கீழே விழும் நிலையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் பெய்யும் மழையின் போது நீர் வரத்து ஆரம்பித்து நீர்வீழ்ச்சியாக ஆர்ப்பரித்து கொட்டும். இந்த சுத்தமான மூலிகைத் தண்ணீரில் குளிப்பதற்காக தமிழகம் முழுவதிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே தமிழகத்தில், தேனி,நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் அமைந்திருக்கும் அருவிகளுக்கு சுற்றுலா பயணிகள் எளிதாக வந்து செல்வதற்கு பாதை வசதி செய்யப்பட்டுள்ளது. அதைப்போலவே  கோரையாறு அருவிகளுக்கு  செல்லும் நடைபாதையை புதுப்பித்து சீரமைத்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் சார்பில் வேண்டுகோள் வைக்கின்றோம்.
பொதுமக்கள், துறையூர், திருச்சி.

வேகத்தடை அமைக்கப்படுமா?
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அதவத்தூர் கிழக்கு விநாயகபுரம் தெரு வளைவில் அதிவேகமாக  வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், மோட்டார் சைக்கிளில் செல்வோர் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 பார்த்தசாரதி, அதவத்தூர் கிழக்கு, திருச்சி.

வாய்க்கால் படித்துறையில் ஆக்கிரமிப்பு
திருச்சி மாவட்டம், லால்குடி வரதராஜன்நகர் அருகில் உள்ள அய்யன் வாய்க்கால் கரையில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளது. இதனால் வாய்க்கால் படித்துறையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. எனவே அந்த வாய்க்காலில் கரையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், லால்குடி, திருச்சி.

சாக்கடையில் அடைப்பு
திருச்சி மாநகராட்சி 19-வது வார்டு ஜெயில் தெரு பழைய மதுரை ரோட்டில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்குள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் சாக்கடை அடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருச்சி.

மரத்தின் மீது மின்கம்பி உரசுவதால் விபத்து 
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், பெருகமணி அருகே உள்ள பழையூர் பிள்ளையார் கோவில் தெருவில் ஒரு மின்கம்பத்தில் தேக்குமரம் உரசி கொண்டு வளர்ந்து வருகிறது. அப்பகுதியில் அடிக்கடி மின் தடையும் ஏற்படுகிறது. திடீரென அந்த மரம் சாய்ந்து விழுந்தால் பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், வாகனங்களில் செல்வோர் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஸ்ரீரங்கம், திருச்சி.

Next Story