கோவில் உண்டியல் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி


கோவில் உண்டியல் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி
x
தினத்தந்தி 24 Jan 2022 7:54 PM GMT (Updated: 24 Jan 2022 7:54 PM GMT)

கோவில் உண்டியல் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூரில் ஊருக்கு அருகே கருப்பையா சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் திருப்பணிக்காக உண்டியலில் காணிக்கை செலுத்தியுள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு கோவிலுக்குள் நுழைந்து கோவிலில் இருந்த வேல்கம்பு மற்றும் சூலாயுதத்தை எடுத்து, அதனைக்கொண்டு உண்டியல் பூட்டை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது உண்டியலின் முன்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு தகட்டில் உள்ள பூட்டு மட்டும் உடைபட்டது. ஆனால் உள்பகுதியில் இருந்த பூட்டை உடைக்க முடியாததால் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். நேற்று காலை கோவிலுக்கு சென்ற பொதுமக்கள் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக கை.களத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவ இடத்தில் கைரேகைகளை சேகரித்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கோவில் உண்டியலை முழுமையாக உடைக்க முடியாததால் உண்டியலில் இருந்த ஆயிரக்கணக்கான ரூபாய் தப்பியது குறிப்பிடத்தக்கது.

Next Story