ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரியாக பதிவு


ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரியாக பதிவு
x
தினத்தந்தி 25 Jan 2022 2:39 PM GMT (Updated: 25 Jan 2022 2:39 PM GMT)

ஊட்டியில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரியாக பதிவானது.

ஊட்டி

ஊட்டியில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரியாக பதிவானது. கடும்குளிரிலும் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.

உறைபனி தாக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உறைபனி தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, எச்.ஏ.டி.பி. விளையாட்டு மைதானம், குதிரை பந்தய மைதானம், ஊட்டி ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள புல்வெளிகளில் அதிகாலையில் பச்சை வெள்ளை கம்பளம் விரித்தாற் போல் உறைபனி படர்ந்து காணப்படுகிறது. 

ஊட்டி காந்தல் முக்கோணம் விளையாட்டு மைதான புல்வெளியில் உறை பனி கொட்டி கிடக்கிறது. உறைபனி மற்றும் கடுங்குளிருக்கு மத்தியில் வீரர்கள், வீராங்கனைகள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உறைபனி கிடக்கும் புல்வெளிகள் மீது ஓடி பயிற்சி மேற்கொள்கின்றனர். முதலில் உடற்பயிற்சிகளை செய்து விட்டு, பின்னர் கால்பந்து, கைப்பந்து விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபட்டனர். வீரர்களுக்கு பயிற்சியாளர்கள் சிறப்பு பயிற்சி அளித்து வருகின்றனர். 

மலைப்பிரதேசமான ஊட்டியில் கடின பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் சமவெளி பகுதிகளில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற முடியும். உறைபனி தாக்கம் இருந்தாலும், தாவரவியல் பூங்கா போன்ற முக்கிய இடங்களில் பொதுமக்கள் கையுறை, கம்பளி ஆடைகள் அணிந்து நடைபயிற்சி செல்வதை காண முடிந்தது.

ஆவியாகும் தண்ணீர்

ஊட்டி அருகே காமராஜ் சாகர் அணையில் மேற்பகுதியில் உள்ள தண்ணீர் உறைந்த நிலையில் இருந்தது. வெயில் வந்த பின்னர் ஆவியானது. இதனால் ஒருபுறம் வெயில், மறுபுறம் பனிமூட்டம் போன்று காட்சி அளித்தது.

 தாவரவியல் பூங்காவில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 19.8 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது. உறைபனியால் புல்வெளிகள் பாதிப்பதை தடுக்க காலையில் ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.

இந்திய வரைபடம், அலங்கார செடிகளாலான பிரத்யேக அலங்காரம் பிளாஸ்டிக் போர்வை கொண்டு மூடி பாதுகாக்கப்படுகிறது. கோடை சீசனை ஒட்டி நடவு செய்யப்பட்டு வரும் மலர் நாற்றுகள் உறைபனி தாக்கத்தில் இருந்து பாதுகாக்க கோத்தகிரி மிலார் செடிகள் சுற்றிலும் வைக்கப்பட்டு உள்ளது. 

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கடுங்குளிரால் விவசாய தொழிலாளர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர். உறைபனி காரணமாக அதிகாலையில் இருசக்கர வாகனங்களை இயக்குபவர்களின் கைகள் விறைத்து விடுகிறது. 

குளிர் தாங்க முடியாமல் கைகளுக்கு கையுறை அணிந்து இருசக்கர வாகனங்களை இயக்குகின்றனர். உறைபனி தாக்கம் அதிகரிப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

Next Story