விருத்தாசலம் அருகே விஷம் குடித்து சர்வேயர் மனைவி தற்கொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


விருத்தாசலம் அருகே  விஷம் குடித்து சர்வேயர் மனைவி தற்கொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2022 4:27 PM GMT (Updated: 25 Jan 2022 4:27 PM GMT)

விருத்தாசலம் அருகே விஷம் குடித்து சர்வேயர் மனைவி தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

விருத்தாசலம்

தற்கொலை 

விருத்தாசலம் அருகே உள்ள இருளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சிவா(வயது 30). இவர், மங்கலம்பேட்டையில் சர்வேயராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மணிபாரதி(21). இவர்களுக்கு 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. 
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மணிபாரதி தொப்புளிக்குப்பம் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் அவர், வீட்டில் விஷம் குடித்து, மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணிபாரதி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள பிணவறையில் வைக்கப்பட்டது. 

வரதட்சணை கொடுமை 

இந்த நிலையில் மணிபாரதியின் உறவினர்கள் நேற்று விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது அவர்கள், சிவா மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால்தான் மனமுடைந்து மணிபாரதி தற்கொலை செய்து கொண்டார். எனவே சிவா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரையில் மணிபாரதியின் உடலை வாங்கமாட்டோம் என்று கூறினர். அதற்கு போலீசார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story