செஞ்சேரிமலை சந்திப்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


செஞ்சேரிமலை சந்திப்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 25 Jan 2022 4:51 PM GMT (Updated: 25 Jan 2022 4:51 PM GMT)

அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால் செஞ்சேரி மலை சந்திப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினார்கள்.

சுல்தான்பேட்டை

அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால் செஞ்சேரி மலை சந்திப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினார்கள். 

போக்குவரத்து நெரிசல்

சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது செஞ்சேரி மலை பகுதி. இங்குள்ள மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில் மிகவும் புகழ்பெற்றது ஆகும். இதனால் இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி  தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். 

இந்த நிலையில் காட்டம்பட்டி-கொடுவாய் சாலையில் செஞ்சேரி மலை சந்திப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் இருந்தன. இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. 

வாகன ஓட்டிகள் கோரிக்கை

இதன் காரணமாக அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. எனவே சந்திப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பரணிதரன், கிணத்துக்கடவு உதவி கோட்டப் பொறியாளர் அருணகிரி ஆகியோர் உத்தரவின்பேரில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இதை தொடர்ந்து அங்கு ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றும் பணி நடந்தது. சுல்தான்பேட்டை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மோகன், சாலை ஆய்வாளர் பெர்னாட்ஷா ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் அங்கு வந்தனர்.

அதுபோன்று பொக்லைன் எந்திரமும் வரவழைக்கப்பட்டது. பின்னர் அந்தப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டன. அப்போது சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

100 மீட்டர் தூரம்

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, செஞ்சேரிமலை சந்திப்பு பகுதியில் 100 மீட்டர் தூரத்துக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன. மேலும் ஆய்வு மேற் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு இருக்கும் பகுதிகளில்  ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றனர். 


Next Story