திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் செய்வதில் சிக்கல்


திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் செய்வதில் சிக்கல்
x

திருவாரூர் மாவட்டத்தில் ஆன்லைனில் முன்பதிவு முறையால் நெல் கொள்முதல் செய்வதில் சிக்கல் நிலவி வருகிறது. இதனால் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் ஆன்லைனில் முன்பதிவு முறையால் நெல் கொள்முதல் செய்வதில் சிக்கல் நிலவி வருகிறது. இதனால் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
அறுவடை பணி
திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடப்பாண்டில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 800 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும், 1 லட்சத்து 37 ஆயிரத்து 360 ஏக்கர் பரப்பளவில் தாளடி சாகுபடியும் என 3 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி நடைபெற்றது. 
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஆன்லைன் முன்பதிவு
இந்நிலையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் முன்பதிவு செய்து இருந்தாலும் நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.  எனவே பழைய முறையில் விவசாயிகளிடம் இருந்து உடனுக்கு உடன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
காத்திருக்கும் விவசாயிகள்
திருவாரூர் அருகே அலிவலத்தில் செயல்பட்டுவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் ஆன்லைன் மூலம் கொள்முதலுக்கு முன்பதிவு செய்து விட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைத்து கடந்த சில நாட்களாக காத்திருக்கின்றனர். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து நெல்லை கொள்முதல் செய்யவில்லை. இதனால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
பாதுகாக்க முடியாத நிலை
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது 
நெல் மூட்டைகள் ஆன்லைன் மூலம் கொள்முதலுக்காக முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. இதைத்தொடர்ந்து அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆங்காங்கே கொட்டியும், மூட்டைகளாக கட்டப்பட்டும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கொள்முதல் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால்அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க முடியாத நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story