‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 25 Jan 2022 6:04 PM GMT (Updated: 25 Jan 2022 6:04 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்: 

தள்ளுவண்டிகளால் நெரிசல்

திண்டுக்கல் மெயின்ரோட்டில் பல இடங்களில் நடைபாதையை ஆக்கிரமித்து தள்ளுவண்டிகள் கடைகள், சாலையோர துணிக்கடைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் மக்கள் நடைபாதையில் செல்ல முடியாமல், சாலையில் நடக்கின்றனர். இதன் காரணமாக வாகனங்கள் செல்வதற்கு இடமின்றி நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மகாலட்சுமி, திண்டுக்கல்.

குப்பைகள் அகற்றப்படுமா? 

  திண்டுக்கல் மாநகராட்சியின் 28-வது வார்டு பாரதியார்தெருவில் குப்பைகள் அள்ளப்படாமல் கிடக்கின்றன. அதை பயன்படுத்தி பலரும் அங்கு வந்து குப்பைகளை கொட்டுகின்றனர். எனவே குப்பைகளை உடனடியாக அகற்றுவதற்கு, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -சுரேஷ், திண்டுக்கல்.

ஆதார் பதிவு தாமதம்

  தேனி மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்களில் ஆதார் பதிவு, திருத்தம் செய்வதற்கு தினமும் ஏராளமான மக்கள் வருகின்றனர். இதனால் ஆதார் பதிவுக்கு மிகவும் தாமதம் ஆவதால், கிராமங்களில் இருந்து வரும் மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க கிராமங்களில் ஆதார் சிறப்பு முகாம் நடத்த வேண்டும். -விவேக், கோட்டூர்.

எரியாத தெருவிளக்குகள்

  வடமதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் பிரதான சாலையில் உள்ள முத்துநகரில் தெருவிளக்குகள் எரியவில்லை. இரவில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து விடுவதால், திருட்டு சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும். -கோபிநாதன், வடமதுரை.

குவிந்து கிடக்கும் குப்பைகள் 

  வத்தலக்குண்டு காந்திநகரில் குப்பைகள் அள்ளப்படாததால், குவிந்து கிடக்கிறது. அந்த குப்பைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை கால்நடைகள் தின்பதால் அவை இறக்கும் அபாயம் உள்ளது. அதேபோல் குப்பைகளுடன் கழிவுகளும் கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்களுக்கு தொற்றுநோய் பரவாமல் தடுக்க தினமும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். -சையது சுல்தான், வத்தலக்குண்டு.

Next Story