மாணவியிடம் வீடியோ எடுத்தவர், துணை போலீஸ் சூப்பிரண்டு முன்பு ஆஜர்


ஆஜராகி விட்டு வெளியே வந்த மாணவியின் தந்தை, சித்தி மற்றும் வீடியோ எடுத்தவர்
x
ஆஜராகி விட்டு வெளியே வந்த மாணவியின் தந்தை, சித்தி மற்றும் வீடியோ எடுத்தவர்
தினத்தந்தி 25 Jan 2022 6:39 PM GMT (Updated: 25 Jan 2022 6:39 PM GMT)

தஞ்சை அருகே விஷம் குடித்து தற்கொலை செய்த பள்ளி மாணவியிடம் தற்கொலை செய்வதற்கு முன்பாக வீடியோ எடுத்தவர், கோர்ட்டு உத்தரவின் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு முன்பு ஆஜராகி, செல்போனை ஒப்படைத்தார். மாணவியின் தந்தை மற்றும் சித்தியிடமும் தனித்தனியே போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.

தஞ்சாவூர்:-

தஞ்சை அருகே விஷம் குடித்து தற்கொலை செய்த பள்ளி மாணவியிடம் தற்கொலை செய்வதற்கு முன்பாக வீடியோ எடுத்தவர், கோர்ட்டு உத்தரவின் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு முன்பு ஆஜராகி, செல்போனை ஒப்படைத்தார். மாணவியின் தந்தை மற்றும் சித்தியிடமும் தனித்தனியே போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.

பள்ளி மாணவி தற்கொலை

அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்த 17 வயது மாணவி லாவண்யா, தஞ்சை அருகே மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்தார். அந்த பள்ளியின் விடுதியில் தங்கி படித்த அவர், கடந்த 9-ந் தேதி விடுதியில் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) சாப்பிட்டார். 
உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவி லாவண்யா கடந்த 15-ந் தேதி தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி 19-ந் தேதி இறந்தார். இது தொடர்பாக திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரியை கைது செய்தனர்.

மதுரை ஐகோர்ட்டில் மனு

இதற்கிடையில், தன்னை கிறிஸ்தவ மதத்திற்கு மாறுமாறு கூறியதாக மாணவி தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பதிவு பரவியது. மேலும் மாணவியின் உடலை வாங்க அவரது பெற்றோர் மறுத்து வந்தனர். 
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றக்கோரி மாணவியின் தந்தை மதுரை ஐகோர்ட்டில் கடந்த 22-ந் தேதி மனு தாக்கல் செய்தார். மாணவியின் உடலை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு கோர்ட்டு அறிவுரையின்படி மாணவி உடலை வாங்கிய பெற்றோர், சொந்த ஊருக்கு கொண்டு சென்று தகனம் செய்தனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு முன்பு...

மேலும், தஞ்சை நீதித்துறை நடுவர் பாரதி முன்னிலையில் மாணவியின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா ஆகியோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அவர்கள் அளித்த வாக்கு மூலம் ‘சீல்’ வைக்கப்பட்டு நேற்று முன்தினம் மதுரை ஐகோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. 
வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், இறப்பதற்கு முன்பாக மாணவி கூறியதை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்த முத்துவேல், செல்போனுடன் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், விசாரணை அதிகாரியான துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா முன்னிலையில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். 

தடயவியல் ஆய்வக சோதனைக்கு...

அத்துடன் வீடியோ பதிவு செய்த நபரை போலீசார் துன்புறுத்தக்கூடாது, வீடியோவின் உண்மைத் தன்மையை உறுதி செய்து. செல்போன் மற்றும் ‘சி.டி' பதிவுகளை சென்னை மயிலாப்பூர் தடயவியல் ஆய்வக சோதனைக்கு அனுப்ப வேண்டும். அவை கிடைத்த அதே நாளில் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதன்பின்னர் உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். 
பிரேத பரிசோதனை குறித்த ஒப்புதலை தஞ்சை தடயவியல் ஆய்வகம், நாளை(வியாழக்கிழமை) அளிக்க வேண்டும். அத்துடன் மனுதாரர் மற்றும் அவருடைய மனைவி ஆஜராக வேண்டும் என்றார்.

செல்போன் ஒப்படைப்பு

இதையடுத்து நேற்று வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், விசாரணை அதிகாரியான துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா முன்னிலையில், மாணவியிடம் வீடியோ எடுத்த அரியலூர் மாவட்ட விசுவ இந்து பரிஷத் உறுப்பினர் முத்துவேல் ஆஜராகி தனது செல்போனை ஒப்படைத்தார். 
மேலும் மாணவியின் தந்தை முருகானந்தம் மற்றும் சித்தி சரண்யா ஆகியோரிடம் தனித்தனியாக, எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ பதிவு மூலமாகவும் வாக்குமூலம் பெறப்பட்டது. 

குடும்ப நண்பர்

போலீஸ் விசாரணைக்கு ஆஜரான பின்னர் முத்துவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-
குடும்ப நண்பர் என்ற அடிப்படையில், தஞ்சை மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரியில, சிகிச்சை பெற்று வந்த மாணவி லாவண்யாவை பார்ப்பதற்காக கடந்த 17-ந் தேதி சென்றேன். அப்போது மாணவியின் பெற்றோர் கூறியதன் அடிப்படையில் மாணவி பேசியதை செல்போனில் பதிவு செய்தேன். மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி செல்போனை ஒப்படைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story